2010-06-23 16:16:02

திருத்தந்தையின் புதன் மறைபோதகம்


ஜூன் 23, 2010. உரோம் நகரின் காலநிலை கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக மழையாகவும் வெயிலாகவும் நிறம் மாறிக்கொண்டிருக்க, இப்புதனின் பொதுப்பேட்டிக்கென திருத்தந்தை 6ம் பவுல் மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்புதனோ மழையின்றி கடும் வெயிலை பொழிந்துகொண்டிருக்க, ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகளுக்கு ஆறாம் பவுல் மண்டபத்தில் தன் மறைபோதகத்தை வழங்கினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

மத்திய காலத்தின் கிறிஸ்தவக் கலாச்சாரம் குறித்த நம் மறைக்கல்விப் போதனையில் மீண்டும் ஒருமுறை புனித தாமஸ் அக்குவினாஸின் படிப்பினைகள் குறித்து நோக்குவோம் என உரையைத் துவக்கினார் அவர்.

விசுவாசத்திற்கும் பகுத்தறிவுக்கும் இடையேயான நல்லிணக்கத்திலும், இறைவனையும் இறைவனின் மீட்புத்திட்டத்தையும் புரிந்துகொள்வதற்கு விசுவாசத்தால் ஒளிர்விக்கப்பட்ட பகுத்தறிவுக்கு இருக்கும் இயலும் நிலையிலுமான புனித தாமஸ் அக்குவினாஸின் சீரிய நம்பிக்கையையும் வெளிப்படுத்தி நிற்கின்றது அவரின் மிக உன்னத படைப்பான Summa Theologiae.

மூவொரு கடவுள் தன்னிலையிலும், இறைவனின் படைப்பிலும், நாம் தந்தையாம் இறைவனிடம் திரும்பிச் செல்வதற்கு வழியாக மனுவுரு எடுத்த இறைமகனிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை Summa Theologiae விளக்குகிறது. நாம் எதற்காக படைக்கப்பட்டோமோ அந்த முடிவற்ற மகிழ்ச்சியைப் பெறுவதற்கு உதவும் வகையில், தூய ஆவியின் கொடை மூலமும் நற்குணங்களைக் கடைபிடிப்பதன் மூலமும் நம் இயற்கையான கொடைகளை முழுமை பெற்றவைகளாக மாற்றுவதில் தெய்வீக அருள் செயலாற்றுவதைக் குறித்து விவரிக்கிறார் புனித தாமஸ் அக்குவினாஸ். இயேசுவின் மீட்பளிக்கும் பணி குறித்த இப்புனிதரின் விளக்கமானது, ஏழு திருவருட்சாதனங்களின் முக்கியத்துவத்தை, குறிப்பாக திருநற்கருணையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. இந்த மாபெரும் இறையியல் உண்மைகள் புனித தாமஸ் அக்குவினாஸின் போதனைகளிலும் பிரதிபலித்து, தெளிவான அதேவேளை எளிமையான வழியில் விசுவாச மறையுண்மைகளையும், கிறிஸ்தவச் செபத்தின் உட்பொருளையும், இயற்கை விதி மற்றும் நற்செய்தியின் அன்பெனும் புதிய கட்டளையால் வடிவமைக்கப்பட்ட ஒழுக்க வாழ்வுக்குக்கான தேவைகளையும் முன்வைக்கின்றன. உன்னதப் புனிதரான இந்த இறைவல்லுனரோடு நாமும் இணைந்து நம் முழு இதயத்தோடு இறைவனை அன்பு செய்வதற்கும், இறைவனிலும் இறைவனுக்காகவும் நம் அயலாரை அன்பு செய்வதற்கும் தேவையான இறை அருளுக்காகச் செபிப்போம் என வேண்டித் தன் புதன் பொது மறைப் போதகத்தை நிறைவு செய்தார் திருத்தந்தை.

மறைபோதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.