2010-06-22 14:38:35

உலகின் புதிய ஒருமைப்பாட்டுணர்வு, நாடுகளின் எல்லை தாண்டிய குற்றங்கள் பெருகுவதற்கும் வழிவகுத்துள்ளது என்கிறார் பேராயர் மிலியோரே.


ஜூன் 22, 2010. உலகின் வியாபாரத் தொடர்புகளின் வளர்ச்சி நாடுகளுக்கு இடையேயான ஒருமைப்பாட்டுணர்வை ஊக்குவிக்க உதவியுள்ள அதே வேளை, நாடுகளின் எல்லை தாண்டிய குற்றங்கள் பெருகுவதற்கும் வழிவகுத்துள்ளது என ஐ.நா. அவைக் கூட்டத்தில் உரையாற்றினார் பேராயர் செலஸ்தினோ மிலியோரே.

பல்வேறு நாடுகளுக்கிடையேயான குற்றக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஐ.நா.வில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடத்தின் ஐ.நா.விற்கான நிரந்தரப் பார்வையாளர் பேராயர் மிலியோரே, இத்தகைய எல்லை தாண்டியக் குற்றங்கள் புதிய சவால்களை முன்வைப்பதால் அவைகளை வெற்றி கொள்ள புதிய வழிமுறைகளும் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பும் சர்வதேச சட்ட உருவாக்கலும் தேவைப்படுகின்றன என்றார்.

இன்று நாடுகளிடையே ஆட்களைக் கடத்திச் சென்று வியாபாரம் செய்வது அதிகரித்துள்ளது என்ற கவலையையும் வெளியிட்ட அவர், இவ்வாறு கடத்தப்படுவோரில் 70 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பது மட்டுமல்ல, அவர்கள் விபச்சாரத்திற்கு என கடத்தப்படுகின்றனர் எனவும் கூறினார்.

சர்வதேச அளவிலானக் கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என்பவை இன்று விபச்சாரத் தொழிலை ஊக்குவிக்கும் ஒரு நிலை இருப்பதைக் காணமுடிகிறது என மேலும் கூறினார் திருப்பீடப் பிரதிநிதி.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பரிமாற்றம் குறித்தும் தன் கருத்துக்களை வெளியிட்ட பேராயர், இதன் உற்பத்திகளைத் தடை செய்யும் அதே வேளை, இதன் தேவைகளையும் கட்டுப்படுத்த நாடுகள் முன்வரவேண்டும் என்றார்.

போதைப்பொருட்களும் பெண்களும் கடத்தப்படுவது, எடுத்துச் செல்லப்படும் நாடுகளின் தேவையைப் பொறுத்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய திருப்பீடத்தின் ஐ.நா.விற்கான நிரந்ததரப் பார்வையாளர் பேராயர் மிலியோரே, அத்தேவைகள் இனங்காணப்பட்டு ஒழிக்கப்படவேண்டும் என்றார்.








All the contents on this site are copyrighted ©.