2010-06-21 16:03:30

“இதுபோல் இனி வேண்டாம்”


ஜூன்21,2010 RealAudioMP3 “இதுபோல் இனி வேண்டாம்”. நேயர்களே, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இந்நாள்வரை எத்தனைமுறை இவ்வாறு சொல்லியிருக்கிறீர்கள்? இவ்வாறு பலர் சொல்லக் கேட்டிருக்கிறீர்கள்? “இதுபோல் இனி வேண்டாம்”. நிச்சயமாக நல்ல காரியங்கள் நடந்த போது சொல்லியிருக்கமாட்டீர்கள். வாழ்க்கையில் மிகவும் கசப்பான, உடலையும் உள்ளத்தையும் கசக்கிப் பிழிந்த, போதுமடா சாமி என்று அலுத்துக் கொள்ளக்கூடிய நிகழ்வுகள் நடந்த போது, “இதுபோல் இனி வேண்டாம்”, இதுபோல் இனி வேண்டவே வேண்டாம்” என்று சொல்லியிருப்பீர்கள். இந்தச் சனிக்கிழமை, பிரிட்டனின் Glasgow வைச்சேர்ந்த Declan Shanley என்ற 13 வயதுச் சிறுவன், நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிய பள்ளித்தோழனைக் காப்பாற்றுவதற்காக நீரில் குதித்த போது Kelvin ஆற்றின் ஆழமான நீரோட்டத்தில் மூழ்கி இறந்துவிட்டான். அச்சம்பவத்தைப் பார்த்தவர்கள், துறுதுறுவென நடமாடிக் கொண்டிருந்த Declan னின் வீரதீரச் செயலைப் பாராட்டிய கையோடு, ஐயோ, இதுபோல் இனி யாருக்குமே நிகழ வேண்டாம் என்றனர். தென்னாப்ரிக்க உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் தோல்வியைச் சந்தித்து வரும் அணிகளின் பரம விசிறிகள்கூட இந்த வார்த்தைகளைச் சொல்லி வருகின்றனர். உலகின் பல இடங்களில் இவ்வாறு சொல்லப்பட்டு வந்தாலும், மிகுந்த ஆதங்கத்தோடு கடந்த வாரம் முழுவதும் இந்தியாவின் போபாலில் சொல்லப்பட்டு வந்தன. “இதுபோல் இனி வேண்டாம்”. கடந்த வாரங்களில் போபாலில் என்ன நடந்தது? இம்மாதம் 7ம் தேதி போபால் சிறப்பு நீதிமன்றம் சொன்ன தீர்ப்பைக் கேட்டு உலகமே ஒருவித ஏளனத்தோடு, வெறுப்போடு பேசியது. இங்கு இத்தாலியில் அதிகம் படித்திராத ஒருவர்கூட இந்தத் தீர்ப்பைத் “துர்மாதிரிகை” என்றார். பல்லாயிரக்கணக்கானோர் இறந்த இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோருக்கு ஈராண்டு சிறைத்தண்டனைதானா என்று இந்திய நாடு முழுவதிலும் அதிர்ச்சி அலை பரவியது. இது “வெட்கத்துக்குரியது”, “தாமதமான தீர்ப்பு, மறுக்கப்பட்ட அநீதி”, என்றெல்லாம் இந்திய பத்திரிகைகள் சாடின. இந்தியாவின் முன்னாள் அரசுத்தலைவர் அப்துல் கலாம் இந்தத் தீர்ப்பைக் கேட்டு வேதனை தெரிவித்துள்ளார். “26 ஆண்டுகள் கழித்து வந்துள்ள இத்தீர்ப்பு, குற்றத்தின் தன்மைக்கேற்ப அமையவில்லை. சட்டமும், நீதித்துறையும் அனைத்து மக்களையும் சமமாக கருத வேண்டும். ஏழை, பணக்காரர் என்று வேறுபடுத்தி பார்க்கக்கூடாது” என்று கூறினார். ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற பன்னாட்டு மனித உரிமைகள் கழகமும் இந்திரா சின்ஹா என்ற எழுத்தாளரும், “இந்தத் தீர்ப்பு மிகமிகக் குறைவானது, மிகமிகத் தாமதமானது” என்று சொல்கின்றனர். திருமதி அலி பானர் என்ற எண்பது வயது மூதாட்டிக்கு வந்த வந்திருந்த கடிதம் பற்றியும் இந்திரா சின்ஹா குறிப்பிடுகிறார்.

திருமதி அலி பானருக்குத் தற்சமயம் பார்வை தெரியாது. 26 ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்ற இந்தப் போபால் நச்சுவாயுக்கசிவு விபத்தில் குடும்ப உறுப்பினர்கள் 16 பேரைப் பலிகொடுத்தவர். இவருக்கு வந்த நிவாரண நிதியளிப்புக் கடிதத்தில், திருமதி, பானர், உங்களின் 16 உறவுகளையும் கண்பார்வையையும் இழந்து இத்தனை ஆண்டுகளாக நீங்கள் அனுபவித்து வரும் வேதனைகளை உணர்கிறோம். இதோ எங்களது இழப்பீட்டுப் பணம் மூன்று பென்ஸ். இது இந்திய பணத்திற்கு எவ்வளவு தெரியுமா? இரண்டு ரூபாய், பத்து பைசா.

இதைவிடக் கொடுமை வேறு இருக்க முடியுமா என்ன? 1984ம் ஆண்டு டிசம்பர் 2க்கும் 3க்கும் இடைப்பட்ட இரவில், மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் இந்த நச்சு விஷவாயு கசிந்தது. போபாலில் செயல்பட்ட யூனியன் கார்பைடு வேதியல் தொழிற்சாலையில் இருந்து கசிந்த மீத்தைல் ஐஸோ சையனேட் என்ற நச்சுவாயுவினால் அன்றே மூச்சுத்திணறி மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்தனர். ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டாயிரம் வரை இருக்கும் என்று அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகின. மொத்தத்தில் 15 ஆயிரம் உயிர்கள் பறிபோயின. ஏறக்குறைய ஆறு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றும் பாதிப்புக்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த ஒரு நிலையில், கடந்த 7 ம் தேதி அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு குறித்து, திருச்சி உரிமையியல் வழக்கறிஞர் சபா இரத்தினம் அவர்களிடம் கருத்துக் கேட்டோம்..

இத்தகைய தவறுகளுக்கு அரசும், இவை சம்பந்தப்பட்ட துறைகளுமே பொறுப்பேற்க வேண்டும் என்று வழக்கறிஞர் சபா இரத்தினம் சொல்கிறார். இந்தத் தீர்ப்பு வெளியாகிய பின்னர் நாட்டில் ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பை முன்னிட்டு, இதற்குத் தீர்வு காணும் நோக்கத்தில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஓர் அமைச்சர் குழுவை நியமித்தார். இந்தக் குழு மூன்று நாட்களாகக் கூடி பரிசீலித்த பின்னர் இத்திங்களன்று பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன்படி,

இவ்வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை அமெரிக்காவில் இருந்து திரும்பக் கொண்டு வந்து அவர் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுத்தல். போபாலில் கைவிடப்பட்ட நிலையில் கிடக்கும் யூனியன் கார்பைடு தொழிற்சாலையின் நச்சு கலந்த மண் மற்றும் அகற்றப்படாமல் கிடக்கும் நச்சுவாயுப் பேரல்களை அந்த இடத்திலேயே அறிவியல் முறைப்படி புதைத்தல். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கொலைக் குற்றத்திற்கான தண்டனை அளிக்கும் சட்டப் பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்ததை ரத்து செய்து விட்டு, கவனக்குறைவால் மரணத்துக்கு காரணமான பிரிவின் கீழ் வழக்கு தொடர 1996 இல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தல் இதற்கான ஏற்பாடுகளை மத்திய பிரதேச அரசு செய்வதற்கு தேவையான நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகளை மத்திய அரசு செய்தல். பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகை வழங்குதல். உயிர் இழந்தோரின் குடும்பங்கள், காயம் அடைந்தோர், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நீண்டகால நோய்க்கு ஆளானவர்கள், உறுப்புகளை இழந்து முடமானவர்கள் போன்றவர்களை வகைப்படுத்தி உதவித் தொகை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் இன்னும் சில பரிந்துரைகளும் சொல்லப்பட்டுள்ளன.

இது ஒருபுறம் இருந்தாலும், இதுபோன்ற கோரச் சம்பவங்கள் இனிமேல் நடவாமல் இருப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளே முக்கியமானவை. விஞ்ஞானி கோபால் என்பவரும் இவ்வாறுதான் சொல்லியிருக்கிறார்: "இந்தியா, ஆப்பிரிக்க நாடுகள் போன்ற மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் எப்போதுமே பரிசோதனை எலிகளாகத்தான் பயன்படுத்தப்படுகின்றனர். யூனியன் கார்பைடு நிறுவனம்கூட முதலில் கனடாவில்தான் இருந்தது. அங்கு மக்கள் எதிர்ப்பு கிளம்பி துரத்தி அடிக்கப்பட்டப் பின்னரே இந்தியாவுக்குள் வந்தனர். ஆபத்து விளைவிக்கக்கூடிய, ஆனால் ஆபத்து விளைவிக்கும் நோக்கம் இல்லாத தொழில்களில் இழப்பீடு வழங்கும் முறைதான் இந்தியாவில் இருக் கிறதே தவிர, அதை முன்கூட்டியே தடுக்கும் வழிமுறைகள் இல்லை.

ஆனால், ''கடலூரிலுள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வேதிக்கழிவுகளை வெளியேற்றும் 31 ஆலைகள் உள்ளன. இந்தத் தொழிற்பேட்டையைச் சுற்றி எட்டு கிலோ மீட்டர் வரை நிலம், நீர் முழுவதும் கெட்டுவிட்டது. 2008-ல் இங்கு ஆய்வுசெய்த மத்திய அரசின் 'நீரி' சூழல் நிறுவனம், 'இந்த ஆலைகளின் கழிவுகளால் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது' என அறிக்கை அளித்தது. அதேபோல், டால்மியாபுரம் சிமென்ட் ஆலை வெளியிடும் காற்றுக் கழிவுகளில், மூளையைப் பாதிக்கும் காரீயம், பாதரசம் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் காட்மியம், பெரிலியம், பேரியம் உள்பட 11 அடர்த்தி அதிகமான உலோகங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இம்மாதிரியான ஆலைகள் பலவும் அரசின் அனுமதி இல்லாமலேயே இயங்குகின்றன. சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 2,500 நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் லைசென்ஸ் இல்லாமல் இயங்குகின்றன. கல்பாக்கம், கூடங்குளம் போன்ற அணு உலைகளில், தைராய்டு புற்றுநோய் ஏற்படக் காரணமான ஐயோடின் 531, புளூட்டோனியம் போன்ற இரசாயனப் பொருட்கள் இருக்கின்றன. ஆல்ஃபா கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் இந்த இடத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில்தான் சென்னை இருக்கிறது. ஆபத்து எதுவும் இல்லை என்று அணு உலை நிர்வாகத்தினர் இதுவரை நிரூபிக்கவில்லை".

நாட்டு நிலைமை இவ்வாறிருக்க, போபால் நச்சுவாயுக் கசிவு விபத்து போன்றதொரு சம்பவம் இனிமேல் ஒருபொழுதும் இடம்பெறமால் இருப்பதற்கு நேயர்களே, நீங்களும் நாமும் என்ன செய்யலாம்? எழுதுங்கள் உங்கள் பரிந்துரைகளை. வழக்கறிஞர் சபா இரத்தினம் பரிந்துரைப்பது என்னவென்றால்

மாற்றம் என்பதற்கு வாய்ப்பே இல்லாதது போல ஒவ்வொருவரும் செயல்பட்டால் வேறு யாரும் இவ்வுலகில் இருக்கமாட்டார்கள் என்பதற்கு உறுதி அளிக்கிறோம் என்று சொன்னார் Noam Chomsky. மனிதன் செல்லும் பாதை தவறானது எனப் பல எச்சரிக்கைகள்

விடப்படுகின்றன. ஆனால் மாற்றம்தான் எட்டாக்கனியாக இருக்கிறது.

ஆக “இதுபோல் இனி வேண்டாம்” . என்ன செய்யலாம்?. வாங்க சேர்ந்து சிந்திப்போம்.








All the contents on this site are copyrighted ©.