2010-06-21 15:57:32

மெக்ஸிகோ வளைகுடாவின் எரிசக்தி எண்ணெய் கசிவு, இன்றைய மனித குலத்திற்கு நல்லதொரு பாடம் என்கிறார் திருப்பீடப்பேச்சாளர்.


ஜூன் 21, 2010 மெக்ஸிகோ வளைகுடாவில் இடம்பெற்ற எரிசக்தி எண்ணெய் கசிவு, இன்றைய மனித குலத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்குமான நல்லதொரு பாடத்தை வழங்குவதாக உள்ளது என்றார் திருப்பீடப்பேச்சாளர் குரு பெதெரிக்கோ லொம்பார்தி.

இதுவரை கணிக்கப்படாத அளவு இழப்பை உருவாக்கி மேலும் தொடர்ந்து கொண்டிருக்கும் இக்கசிவானது, மனித குல நடவடிக்கைகளால் இடம்பெறும் மிகப்பெரும் சுற்றுச்சூழல் இழப்பு குறித்து தாழ்மையுடன் நாம் படிக்கவேண்டிய பாடமாக உள்ளது என்றார் திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் இயேசு சபை குரு லொம்பார்தி.

1984ம் ஆண்டு இந்தியாவின் போபாலில் இடம்பெற்ற விஷ வாயு கசிவு மற்றும் 1986ன் உக்ரைன் செர்னோபில் அணுமின் நிலைய விபத்து ஆகியவைகளையும் உதாரணமாகக் காட்டினார் அவர்.

மிகப்பெரும் வசதிகளையுடைய ஒரு நிறுவனத்தாலேயோ அல்லது மிகப்பெரும் சக்தி வாய்ந்த ஒரு நாட்டாலேயோ இந்த எண்ணெய்க் கசிவு பிரச்னையில் உடனடியாகத் தீர்வு காண முடியா நிலை இருப்பதையும் சுட்டிக்காட்டினார் திருப்பீடப்பேச்சாளர்.

கடலடியில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு துளையை மனிதனாலேயே தன் தொழில் நுட்ப முன்னேற்றங்களின் உதவியுடன் அடைக்கமுடியாத நிலை கடந்த 2 மாதங்களாகத் தொடர்ந்து வருவதையும் சுட்டிக்காட்டினார் குரு லொம்பார்தி.

தொழில் நுட்பம் என்பது வளர்ச்சியைக் கொணரும் என்பது உண்மையெனினும் இயற்கையை மிகுந்த பொறுப்புணர்வுடன் பயன்படுத்தவேண்டும் என்ற பாடத்தை தாழ்ச்சியுடன் கற்றுக்கொள்ள இது போன்ற நிகழ்வுகள் சொல்லித்தருகின்றன என மேலும் கூறினார் அவர்.








All the contents on this site are copyrighted ©.