2010-06-21 15:53:11

சிலுவையைச் சுமப்பது என்பது பாவத்தை வீழ்த்துவதற்கான அர்ப்பணிப்பு என்றார் பாப்பிறை.


ஜூன் 21, 2010 சிலுவை மீதான அன்புடன் கூடிய பாதையில் நடைபோடுவதற்கான அழைப்பைச் சீடர்களிடம் மீண்டும் புதுப்பித்த இயேசு, நாமும் அவரை நம் வாழ்வில் தினமும் பின்பற்ற இன்றும் நம்மை நோக்கி அழைப்பு விடுக்கிறார் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

சிலுவையைச் சுமப்பது என்பது பாவத்தை வீழ்த்த ஒருவர் தன்னையே அர்ப்பணிப்பதையும், ஒவ்வொரு நாளும் இறைவிருப்பத்தை ஏற்பதையும், எவ்விதமான துன்ப இடர்பாடுகளின் மத்தியிலும் விசுவாசத்தில் வளர்வதையும் சுட்டிக்காட்டி நிற்கின்றது என்றார் பாப்பிறை.

இஞ்ஞாயிறு மூவேளை ஜெப உரையின் போது இவ்வாறு கூறிய திருத்தந்தை, இஞ்ஞாயிறன்று உலக அகதிகள் தினம் ஐ.நா.வால் சிறப்பிக்கப்பட்டது குறித்தும் புனித இராயப்பர் பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களிடம் எடுத்தியம்பினார்.

தங்களுடைய மாண்பும் மனித உரிமைகளும் தாங்கள் குடியேறும் நாடுகளில் மதிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கும் ஒவ்வோர் அகதியும், தாங்கள் அடைக்கலம் தேடும் நாடுகளின் வளர்ச்சிக்கென தங்களால் இயலும் பங்களிப்பை வழங்க எப்போதும் தயாராக இருக்கிறார்கள் எனவும் கூறினார் பாப்பிறை.

கிர்ஜிஸ்தானில் இடம்பெறும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டி அந்நாட்டின் அமைதிக்காக ஜெபிக்கவேண்டியதன் அவசியத்தையும் இம்மூவேளை ஜெபஉரையின் இறுதியில் வலியுறுத்திய திருத்தந்தை, அண்மை மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் தென் கிர்ஜிஸ்தானில் அமைதி ஏற்படுத்தப்பட்டு பாதுகாப்புக்கு உறுதி வழங்கவேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.

போரிடும் இனக்குழுக்கள் வன்முறைகளைக் கைவிடவேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளைச் சர்வதேச சமுதாயம் உடனடியாக ஆற்றவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.