இலங்கையில் தண்டனைச் சட்டங்கள் சீரமைக்கப்பட அழைப்பு விடுத்துள்ளது தலத்திருச்சபை.
ஜூன் 21, 2010 இலங்கையின் சிறைகளை மேம்படுத்துவதுடன், சிறைக்கைதிகளின் உரிமைகள் மதிக்கப்பட்டு
அவர்களுக்கு சரியான நீதி கிட்ட வழிவகைச் செய்யப்பட வேண்டும் என அரசை நோக்கி அழைப்பு விடுத்துள்ளனர்
அந்நாட்டு தலத்திருச்சபை அதிகாரிகள்.
சிறை சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்கான
இலங்கை அமைச்சருடன் அண்மையில் பேச்சுவார்த்தைகளை நடத்திய சிறைக்கைதிகளுக்கான கத்தோலிக்க
மேய்ப்புப்பணி அவையின் அங்கத்தினர்கள், முன்னாள் தமிழ்ப்போராளிகள் மீதான நீதியான விசாரணைகள்,
அவர்களுக்கான மதம் சார்ந்த திட்டங்கள், உளவியல் ஆலோசனைகள், மற்றும் மரண தண்டனை நாட்டிலிருந்து
முற்றிலுமாக ஒழிக்கப்படுதல் ஆகியவை பற்றி அவருடன் விவாதித்தனர்.
இலங்கையின் தண்டனைச்
சட்ட அமைப்பு முறை குறித்து கொழும்பு பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு
பேராயர் மால்கம் ரஞ்சித் தலைமை தாங்கினார்.
சிறைக்கைதிகளுக்கு தரமான உணவு, தியானத்தில்
உதவும் திட்டங்கள், குறிப்பிட்ட மதம் என்று தனித்துப் பாராமல் மத ரீதியான ஆலோசனைகள்,
கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சிகள் போன்றவைகளுக்காகவும் அரசிடம் பரிந்துரைத்துள்ளனர்
கத்தோலிக்கத் தலைவர்கள்.
சிறைத்துறையில் பணிபுரியும் ஒவ்வொரு காவல்துறை அதிகாரிக்கும்
உளவியல் சார்ந்த கல்வி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சிறைத்துறை அமைச்சர் டான்
குணசேகராவிடம் வலியுறுத்தினர் தலத்திருச்சபை அதிகாரிகள்.