2010-06-19 14:46:16

உலக உணவு திட்டம் அலுவலகம் மீண்டும் கிளிநொச்சியில்


ஜூன்19,2010 WFP என்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உலக உணவு திட்ட அலுவலகம், இலங்கையின் கிளிநொச்சியில் இவ்வெள்ளி முதல் மீண்டும் இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற இறுதியுத்தம் காரணமாக ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்ட அலுவலக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

யுத்தம் காரணமாக அந்த அமைப்பின் அலுவலகத்துக்குச் சொந்தமான 7.5 ஏக்கர் நிலப்பரப்பு பெரும் சேதத்துக்கு உட்பட்டிருப்பதாக, உலக உணவுத் திட்டத்தின் பேச்சாளர் எமிலியா கசெல்லா (Emilia Casella) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமது அலுவலகம் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் காரணமாக மூடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்போது நிலவுகின்ற சுமுக நிலையைத் தொடர்ந்து, அங்கு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகளையும் இணைத்துக் கொண்டு சேவையாற்ற நடவடிக்கை எடுக்கப்படடுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

WFP நிறுவனத்தின் அலுவலகம் இல்லாமலே, அது, முகாம்களில் இருக்கும் சுமார் 62,000 பேர் உட்பட புலம் பெயர்ந்த மக்களுக்கும், தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ள 2,28,000 பேருக்கும் உணவு உதவிகளைச் செய்து வருகிறது.








All the contents on this site are copyrighted ©.