2010-06-17 15:07:48

இரத்தமயமான ஞாயிறு குறித்த அறிக்கையை மகிழ்வோடு வரவேற்பதாக அயர்லாந்து ஆயர் பேரவை அறிவித்துள்ளது


ஜூன்17,2010 “இரத்தமயமான ஞாயிறு” குறித்த அறிக்கை, அச்சம்பவம் நிகழ்ந்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்திருப்பதை மகிழ்வோடு வரவேற்பதாக அயர்லாந்து ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
1972ம் ஆண்டு சனவரி 30 ஞாயிறன்று, மக்கள் உரிமைக்கான போராட்டத்தில், அமைதியான முறையில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் மேல் பிரித்தானியப் படையினர் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
எவ்வித காரணமும் இன்றி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்த விசாரணை 1998ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இச்செவ்வாயன்று நிறைவு பெற்றது. விசாரணையின் முடிவில் வெளியான இந்த அறிக்கையில், பிரித்தானிய படைவீரர்களின் செயல் கண்டனத்திற்குரியது எனத் தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசின் சார்பாக, பிரதம மந்திரி David Cameron இச்செவ்வாயன்று மக்களவையில் மன்னிப்பு கேட்டார் என்று செய்திகள் கூறுகின்றன.இவ்வறிக்கை வெளியான செவ்வாய்க் கிழமையை செபத்தில் கழித்த அயர்லாந்து ஆயர்கள், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும், சிறப்பாக இந்தப் போராட்டத்தில் உயிரிழந்த, காயப்பட்ட நம் சகோதரர்கள் அனைவரையும் நம் மனதிலும், செபத்திலும் தொடர்ந்து நினைவுக் கூர்வோம் என்று தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.