2010-06-17 15:08:28

இளம் குருவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள "The Last Summit" என்ற திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார் ஸ்பெயின் நாட்டின் ஆயர்


ஜூன்17,2010 குருக்கள் ஆண்டின் நிறைவையொட்டி வெளி வந்துள்ள "The Last Summit" என்ற திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார் ஸ்பெயின் நாட்டின் San Sebastian மறை மாவட்ட ஆயர் Jose Ignacio Munilla.
மலையேறும் முயற்சியில் ஓராண்டுக்கு முன் இறந்த இளம் குரு Pablo Dominguezஐ மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படம், குருத்துவம் குறித்த வாடிக்கையான, தவறான எண்ணங்களைச் சரி செய்யும் வகையில் வெளி வந்துள்ள ஒரு திரைப்படம் என்று ஆயர் Munilla கூறினார்.
குருக்களையும், குருத்துவத்தையும் பற்றி அண்மையில் எழுந்துள்ள பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில், குருத்துவத்தின் மாண்பை நிலைநிறுத்தும் இது போன்றதொரு திரைப்படம், அதுவும் குருக்கள் ஆண்டு நிறைவாகும் இந்த நேரத்தில் வெளி வந்திருப்பது பொருத்தமானதே என்று ஆயர் மேலும் கூறினார்.
“இன்றையக் காலக் கட்டத்தில் ஒரு குருவை சிலுவையில் நீ அறைந்தால், இந்த உலகம் உன்னைப் பாராட்டும்; மாறாக, ஒரு குருவை நீ பாராட்டினால், இந்த உலகம் உன்னைச் சிலுவையில் அறையும்” என்று இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் முன்னுரையாகப் பேசியிருப்பது திரைப்படத்தின் அழகான ஓர் ஆரம்பம் என்று ஆயர் Munilla கூறினார்.ஆவணப் படத்தின் நாயகனான Pablo Dominguezன் விசுவாசம், தாழ்ச்சி, தாராள மனம், பணியில் அவர் கொண்டிருந்த தளராத ஆர்வம் இவை எல்லாம் பலர் மனதிலும் மேலான எண்ணங்களை விதைக்கும் என்று ஆயர் Jose Ignacio Munilla தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.