2010-06-16 16:35:42

ஜூன் 17 – நாளும் ஒரு நல்லெண்ணம்


நன்மைகள் செய்பவர்களாக வாழவேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் நினைக்கின்றோம்,

உணர்ச்சி மேம்பாட்டால் உறுதியும் எடுக்கின்றோம்.

ஆனால் நாம் நல்லவர்களாக வாழ்வதில்லை, வாழ முடிவதில்லை.

ஏன்? நாம்தானா?, நம் சூழலா? நமக்கேத் தெரியாததா?

வாழ்வில் நல்லவைகளுக்கும் தீயவைகளுக்கும் இடையேயான இடைவெளி குறைந்து வருகிறது, அர்த்தங்கள் மாறுபட்டு வருகின்றன.

உதாரணத்திற்கு, தியாகம் என்பதன் இன்றைய அர்த்தத்தைப் பாருங்கள்.

தியாகம் என்று எதைக் கூறமுடியும்?

குடும்பத்திற்குச் செய்வது தியாகம் ஆகுமா?

நட்புக்கோ, நாட்டுக்கோ செய்வது தியாகமாகுமா?

நிச்சயமாக கிடையாது.

ஏனெனில், கடமை என்ற ஒன்று இடையில் இருக்கிறது.

தியாகம் என்பது எல்லையற்றது, ஈடற்றது.

அப்படியொன்றை யார் நிகழ்த்தமுடியும்?

ஒப்பீட்டு முறையில் வேண்டுமானால் மற்றவரை விட

நாம் ஆற்றியது அதிகமாக இருக்கலாம்.

மதிப்பீட்டு முறையில் அவை கடமைகள் தான்.

ஆனால், துரோகத்தைக்கூட தியாகம் என்று பெருமைப்படுத்த நினைக்கும் நாகரீகத்திற்கு நாம் வந்துவிடவில்லையா?

" உனக்காக என் பெற்றோரையேத் தியாகம் செய்துவிட்டு வந்தேனே, எனக்குத் துரோகம் செய்து விட்டாயே, நியாயமா" எனக் காதலியைப் பார்த்துக் கேட்டான் காதலன்.

பக்கத்திலிருந்த நண்பன் சொன்னான் "காதலுக்காக பெற்றோரைத் தூக்கியெறிந்த துரோகச்செயலை தியாகம் என்கிறாயே இது நியாயம் தானா" என்று.

கடமைக்கே கையூட்டுக் கேட்கும் காலத்தில் நேர்மையாய் வாழும் அதிகாரியைத் தியாகி என்பது நியாயம் ஆகுமா?

கடமையை ஆற்றுபவரையே தியாகி என்றுத் தூக்கிப்பிடிப்பதும் கையூட்டாகாதா?

என்றாவது நாம் தியாகம் செய்திருக்கிறோமா?

கடமை என்பதிலிருந்து எவ்வகையில் அது வேறுபட்டு நிற்கின்றது?

பின்னோக்கிப் பாருங்கள்.








All the contents on this site are copyrighted ©.