2010-06-15 16:15:33

விவிலியத் தேடல்


RealAudioMP3
வேறு எந்தத் திருப்பாடலுக்கும் இல்லாத ஒரு தனித்துவம், இன்னும் சொல்லப்போனால், ஒரு வேளை, விவிலியத்தில் வேறு எந்த பகுதிக்கும் இல்லாத ஒரு தனித்துவம், திருப்பாடல் 18க்கு உண்டு. இந்தப் பாடலில் வரும் வரிகள் அனைத்தும் வரிக்கு வரி விவிலியத்தின் மற்றொரு புத்தகத்தில், அதாவது 2 சாமுவேல் 22: 1-51ல் காணக் கிடக்கின்றன.
சவுலும், அவரது படையும் தாவீதை இரவும் பகலும் வேட்டையாடி வந்ததால், தாவீது தன் வழக்கை இறைவனிடம் கொண்டு சென்றார் என்று திருப்பாடல் 17ல் போன வாரம் சிந்தித்தோம். அந்த வழக்கு தாவீதுக்குச் சாதகமாக, வெற்றியாக முடிந்ததால், திருப்பாடல் 18 தாவீதின் நன்றி பாடலாக, வெற்றிப் பாடலாக ஒலிக்கின்றது.
இந்தப் பாடலையோ அல்லது 2 சாமுவேல் 22ல் காணப்படும் அந்தப் பாடலையோ நிதானமாக வாசித்துப் பாருங்கள். இதை இப்படி நிதானமாக வாசிக்க ஒருவேளை 10 அல்லது 15 நிமிடங்கள் ஆகலாம். ஆனால், அந்த மணித்துளிகள் எல்லாமே பயனுள்ளவையாக உங்களுக்கு இருக்கும். அதில் சந்தேகமில்லை.
பலவித உடல், உள்ள, குடும்பக் கவலைகள் உங்களைச் சுற்றி வளைத்திருப்பதாக நீங்கள் உணர்ந்தால், இந்தத் திருப்பாடலை நிதானமாகப் படிப்பது நிச்சயம் உதவும். அதிலும் சிறப்பாக, இரவு தூங்கப் போகும் முன் இந்தப் பாடலை வாசித்து விட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள். கடவுள் மீது உங்கள் நம்பிக்கை மலை போல உயரும். தந்தையின், தாயின் பாதுகாப்பான அரவணைப்பில் ஆழ்ந்துறங்கும் குழந்தையைப் போல் உங்களாலும் உறங்க முடியும்.
அல்லது, காலையில் கண் விழித்ததும், இந்தப் பாடலை வாசித்துப் பாருங்கள்... ஆழ்ந்த ஒரு நம்பிக்கையோடு அந்த நாளை உங்களால் எதிர்கொள்ள முடியும்.
இறைவன் நம்மைச் சுற்றிலும் இருந்து நம்மைக் காக்கின்றார், நமக்கென இறங்கி வந்து நம் பகைகளை எல்லாம் முறியடிக்கின்றார் என்ற மையக் கருத்துக்களை 50 அற்புதமான திருவசனங்களில் சொல்லியிருக்கிறார் தாவீது.
திருப்பாடலின் ஆரம்ப வரிகளைக் கேட்போம்:

திருப்பாடல் 18 1-2
என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை: என் கோட்டை: என் மீட்பர்: என் இறைவன்: நான் புகலிடம் தேடும் மலை அவரே: என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். 
நாம் இப்போது வாசித்த இந்த முதல் இரண்டு திருவசனங்களில் தாவீது இறைவனுக்கு ஒன்பது அடைமொழிகள், பட்டங்கள் தருகிறார். என் ஆற்றல், என் கற்பாறை, என் கோட்டை, என் மீட்பர், என் இறைவன், என் மலை, என் கேடயம், என் வல்லமை, என் அரண்... இந்த அடைமொழிகளை, பட்டங்களைக் “கடவுள் ஒரு கற்பாறை, அரண், கேடயம்” என்றெல்லாம் பொதுவாகக் கூறாமல், கடவுளை “என் கற்பாறை, என் அரண், என் கேடயம்…” என்று உரிமை கொண்டாடுகிறார் தாவீது. “என் அப்பாதான் உலகிலேயே மிகப் பெரிய பலசாலி” என்று ஊருக்கெல்லாம் கத்திச் சொல்லும் குழந்தையை நினைவுபடுத்துகிறார் தாவீது.

அன்பர்களே, இந்தியாவில் பல இடங்களில் அதிகாலையில் சுப்ரபாதம் ஒலிப்பதைக் கேட்டிருப்பீர்கள், அல்லது, மார்கழி மாதத்தில் பக்தி நிறைந்த பஜனைகள் கேட்டிருப்பீர்கள். சுப்ரபாதம், பஜனை, நாம செபம் என்ற இந்தப் பாடல்களில் கடவுளின் பல குணங்கள் வரிசையாகப் பாடப்படும், திரும்பத் திரும்பப் பாடப்படும். கண் மூடி இந்தப் பாடல்களைக் கேட்பது, அல்லது பாடுவது மனதில் பல நல்ல உணர்வுகளை எழுப்பும். கடவுளின் அற்புதமான பல குணங்களை ஆழமாய் உள்ளத்தில் பதிக்க, அந்த குணங்களில் நம்பிக்கையை வளர்க்க இந்தப் பாடல்கள் நல்லதொரு வழி.
அதேபோல், இந்தத் திருப்பாடலின் முதல் வரிகளில் உள்ள இந்த அடைமொழிகளை அல்லது திருப்பாடல்கள் அனைத்திலுமே இறைவனுக்கென கூறப்பட்டுள்ள அடைமொழிகளை, உருவகங்களை எல்லாம் பட்டியலிட்டு, எழுதி வைத்து, தினமும் அவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தால் நல்ல பலன் அடைவோம். இறைவன் என் ஆற்றல், என் கற்பாறை, என் கோட்டை... என்று அடிக்கடி சொல்லப் பழகி வந்தால், காக்கும் அந்தக் கடவுளின் பாதுகாப்பை நாள் முழுவதும் உணர்வோம்.

திருப்பாடல்களில் தாவீது அடிக்கடி கூறும் கடவுளின் ஓர் அற்புத குணம் அவரது காக்கும் குணம். இந்த ஒரு குணத்தை வலியுறுத்தவே, கடவுளைத் தன் கற்பாறை, கோட்டை, அரண், கேடயம் என்று தாவீது அடிக்கடி கூறியிருக்கிறார்.  19:14; 28:1; 31:2-3; 42:9; 71:3; 144:1-2 என்ற பல திருப்பாடல்களில் இறைவன் தன் பாறை என்ற அந்த உருவகத்தைப் பல முறை பயன்படுத்தியிருக்கிறார். இதேபோல், இறைவன் கேடயமாக, அரணாக இருப்பதை திருப்பாடல்கள் 28, 59, 84, 144, எடுத்துரைக்கின்றன.

கடவுள் ஒரு கற்பாறை என்ற அந்த அடைமொழியை இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்திப்போம். கடவுளை ஒரு கற்பாறையாக தாவீது ஏன் கற்பனை செய்தார் என்பதை புரிந்து கொள்வதற்கு, தாவீதின் வாழ்க்கையைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்பது உதவியாக இருக்கும்.
பசும் புல்தரைகளில், சம வெளிகளில் ஆடுகளை மேய்த்துக் கொண்டு, எந்த ஒரு கவலையும் இல்லாமல் வாழ்ந்தவன் சிறுவன் தாவீது. வீட்டின் கடைசிப் பிள்ளை. பொறுப்புகள் குறைவு. செல்லம் அதிகம். ஆடுகளை மேய்க்கும் போது அந்தச் செல்லப் பிள்ளை அதிகம் கனவுகள் கண்டிருப்பான், அந்தக் கனவுகளைப் பாடல்களாகவும் பாடியிருப்பான்.
சிறுவனான தாவீதை இறைவாக்கினர் சாமுவேல் தேடிச் சென்று இஸ்ராயலின் அரசனாகும்படி அர்ச்சிக்கிறார். எதிர்பாராமல் வந்த இந்தப் பொறுப்பின் பாரங்களைக் கொஞ்சமும் புரிந்துகொள்ளவில்லை தாவீது.
பிலிஸ்தியர்களுடன் எழுந்த சண்டையில் அரக்கன் கொலியாத்தைத் தன் கவணில் ஏற்றிய கல்லால் வென்றது, கொன்றது, எல்லாமே தாவீதுக்கு விளையாட்டாகத் தான் இருந்திருக்கும்.
இப்படி கவலை, பொறுப்பு இவைகளின் பாரங்களை உணராமல் தாவீது வாழ்வை அனுபவித்ததற்கு முக்கிய காரணம்? சிறு வயது முதல் இறைவன் தன்னைச் சுற்றி நின்று காக்கின்றார் என்ற எண்ணம் அவரில் வளர்ந்திருந்ததுதான். தந்தையோ, தாயோ அருகிருக்கிறார் என்ற நம்பிக்கையில் குழந்தைகள் செய்யும் சாகசங்களைப் பார்த்திருப்பீர்கள். இல்லையா? இப்படி வாழ்வை அனுபவித்துக் கொண்டிருந்த தாவீது, சவுலின் வெறுப்பு, பொறாமையைக் கண்டு உண்மையிலேயே அரண்டு, மிரண்டு போயிருக்க வேண்டும். வாழ்வின் எதார்த்தங்கள் முதன் முறையாக அவனைத் தாக்கியிருக்க வேண்டும்.
இந்த எதார்த்தங்களிலிருந்து தப்பியோடி, இரவில், மலையில் பாறைகளின் இடுக்கில், குகையில் தங்க வேண்டிய கட்டாயம் தாவீதுக்கு.
ஆடுகளை மேய்க்கும் போது, பசும் புல்தரையில் படுத்து, ஆகாயத்தை, அங்கு கண் சிமிட்டும் விண்மீன்களைப் பார்த்தவாறே கனவுகளோடு உறங்கிய தாவீது, இப்போது மலைக் குகைகளில் கடினமான பாறை மீது படுத்து, குகையின் இருட்டில் உறங்க முடியாமல் தவித்திருக்க வேண்டும். தூக்கம் வராமல் தவித்த அந்த நேரத்தில், இறைவன் அந்தக் குகையாக, மலையாக, பாறையாகத் தன்னைச் சுற்றி நிற்கிறார் என்று சிறுவயது முதல் அவர் நம்பி வந்த எண்ணங்கள் மீண்டும் அவர் நினைவுகளை நிறைத்திருக்க வேண்டும்.

இறைவன் ஒரு பாறை... பாதுகாப்பு, நிம்மதி தரும் ஒரு உருவகம் இது. பாறை அசைவுறாது. பாறை மீது கட்டப்படும் எதுவும் உறுதியாக இருக்கும். இஸ்ராயலர்களுக்கும், தாவீதுக்கும் இறைவன் ஒரு பாறை என்ற எண்ணம் ஆழமாய் வேரூன்றிய ஓர் எண்ணம். பல நாட்டினராலும் அடிமைப் படுத்தப்பட்டு, நாடு விட்டு நாடு ஓடி பயந்து, பதுங்கி வாழ்ந்து வந்த இஸ்ராயலர்களுக்கு, மலை மீது கட்டப்பட்ட சீயோன், உறுதியாகக் கட்டப்பட்ட எருசலேம் இவைகள் பாதுகாப்பின் அடையாளங்கள். எனவே, அவர்களுக்கு கடவுளைப் பாறையாக உருவகிப்பதென்பது மிக எளிதான ஒரு கற்பனை.
உணர்வற்று, இறுகிப் போன உள்ளங்களைப் பாறைகள் என்கிறோம். கடவுளைப் பாறையாக உருவகிக்கும் போது, இந்த ஓர் ஆபத்தும் உண்டு. ஆனால், பாறைக்குள் பலவித புதுமைகளைப் பார்த்தவர் தாவீது. மலைகளில் பாறை இடுக்குகளில் புகும் தேனீக்கள் அங்கு கட்டும் தேன் கூடுகளை நாமும் பார்த்திருக்கிறோம். பாறைக்குள்ளிருந்து தேன் பருகிய அனுபவம் இடையனாக இருந்த தாவீதுக்குக் கட்டாயம் இருந்திருக்கும். பாறையிலிருந்து நீரை வரவழைத்த மோசேயின் செயலும் தாவீதின் மனதில் ஆழமாய்ப் பதிந்த ஒரு நிகழ்ச்சிதானே!

இப்படி பாறை உறுதி, பாதுகாப்பு இவைகளுக்கு அடையாளமாக இருக்கும் அதே வேளை, அந்தப் பாறையிலிருந்து சுவை மிகு தேன், தாகம் தணிக்கும் நீர் இவைகளும் உருவாகும் என்பதும் பாறையின் அம்சங்களாய் இருக்கின்றன. இவைகளையெல்லாம் ஒட்டு மொத்தமாக உள்ளடக்கிய ஒரு கோணத்தில் தாவீது இறைவனைப் பாறையாகக் கற்பனை செய்துள்ளார்.
பாதுகாப்பு, பரிவு, பகைமையைக் களைய இறைவனே இறங்கி வருதல் என்று அற்புதமான எண்ணங்களைத் தாங்கி வரும் இந்தத் திருப்பாடல் 18ஐ நிதானமாக இன்று ஒரு முறை வாசிப்போம். முடிந்தால், இதே எண்ணங்களை பறைசாற்றும் திருப்பாடல்கள் 20, 21 இரண்டையும் சேர்த்துப் படிக்கலாம். இந்த மூன்று திருப்பாடல்களின் வழி தாவீது கூறும் எண்ணங்களை, உணர்வுகளை நமதாக்க முயல்வோம்.

இதோ நம் எண்ணங்களை நிறைவு செய்ய வரும் திருப்பாடல் 18ன் ஒரு சில வரிகள்:

திருப்பாடல் 18: 28-30, 46
 
ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர். என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர். உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்: என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன். இந்த இறைவனின் வழி நிறைவானது: ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது: அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார்.ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவராக!







All the contents on this site are copyrighted ©.