2010-06-15 15:38:02

புனித பூமியில் நிரந்தரத்தீர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இலத்தீன் ரீதி பிதாப்பிதா.


ஜூன் 15, 2010. புனித பூமியில் பல ஆண்டுகளான மோதல்களையும் வன்முறைகளையும் தாங்கிவரும் மக்களுக்கு விடுதலை கொடுக்கும் நோக்குடன் காசா பகுதி மீதான தடைகள் அகற்றப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் யெருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதா.
பலரின் வீடுகள் அழிவுக்குள்ளாகியுள்ளதாகவும், பலர் போரின் காரணமாக அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் உரைத்த பேராயர் Fouad Twal, இன்று வெளியிலிருந்து கிட்டும் உதவிகள் அனைத்தும் வலி நிவாரண மாத்திரைகள் போன்றே உள்ளன, அவைகள் ஒரு நாளும் நிரந்தரத் தீர்வைத் தரமுடியாது என்றார்.
கோவிலுக்கோ, மருத்துவமனைகளுக்கோ, பணியிடங்களுக்கோ சுதந்திரமாகச் செல்ல முடியாத நிலை இருக்கும்போது எந்த ஒரு மனிதனாலும் சுமுகமான ஒரு வாழ்வை வாழ முடியாது எனவும் கூறினார் யெருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதா பேராயர் துவால்.
இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் யூதர்களும் ஒற்றுமையில் வாழ்வதற்குத் தடையாக இருக்கும் எந்த ஒரு செயலுமே அமைதிக்குச் சேவையாற்றுவதில்லை என மேலும் தன் கவலையை வெளியிட்டார் பேராயர்.இன்றையச் சூழல்கள் அமைதிப்பேச்சுவார்த்தைகளுக்குச் சாதகமானதாக இல்லையெனினும் நம்மபிக்கையைக் கைவிடாமல் வாழவேண்டிய தேவை உள்ளது என மேலும் கூறினார் அவர்.
1967ம் ஆண்டு முதல் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு பாலஸ்தீனிய மக்களிடையே பணியாற்றி வருவதைச் சுட்டிக்காட்டிய பேராயர் துவால், வன்முறைகளின் மத்தியிலும் பாலஸ்தீனியப்பகுதியில் கிறிஸ்தவப்பள்ளிகளும் மருத்துவமனைகளும் தொடர்ந்துச் செயலாற்றி வருவதையும் எடுத்தியம்பினார்.







All the contents on this site are copyrighted ©.