2010-06-15 15:47:21

கடந்த ஆண்டில் 2 இலடசத்து 51 ஆயிரம் அகதிகள் தங்களது சொந்த இடங்களுக்குக் திரும்பியுள்ளனர்


ஜூன்15,2010 உலகின் ஒரு கோடியே 50 இலட்சம் அகதிகளுள் 2 இலடசத்து 51 ஆயிரம் பேரே தங்களது சொந்த இடங்களுக்குக் கடந்த ஆண்டில் திரும்பியுள்ளனர், இது, கடந்த இருபது ஆண்டுகளில் மிகக்குறைவான எண்ணிக்கையாக இருக்கின்றது என்று ஐ.நா.நிறுவனம் இச்செவ்வாயன்று அறிவித்தது.
ஆப்கானிஸ்தான், சொமாலியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளில் தொடந்து இடம் பெறும் சண்டைகள், பல அகதிகளைத் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் செய்துவிட்டன என்று, UNHCR என்ற அகதிகளுக்கான ஐ.நா.உயர் இயக்குனர் அந்தோணியோ குட்டெரெஸ் (Antonio Guterres) கூறினார்.
ஈரான், தென்சூடான் போன்ற பகுதிகளில் எல்லா உடைமைகளுடனும் இடம் பெயர்ந்த மக்களும், குடிபெயர்ந்த இடங்களிலே 2009ம் ஆண்டில் தங்கிவிட்டனர் என்றும் UNHCR அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
UNHCR அமைப்பின் பொறுப்பில் இருக்கின்ற அகதிகளில் பாதிப்பேர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கைச் சேர்ந்தவர்கள்.
உலகின் அகதிகளுள் பெரும்பாலானோர்கள் கடந்த ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக அகதிகளாகவே வாழந்து வருகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.