2010-06-15 08:14:49

ஓர் அருட்பணியாளர் கிறிஸ்துவின் கொடையாக இருக்கிறார் - திருத்தந்தை


ஜூன் 14, 2010. மக்களின் பொது வாழ்வு மற்றும் சமய சுதந்திரங்களுக்காக வரலாறு முழுவதும் அருட்பணியாளர்கள் ஆற்றியுள்ள பணிகளைப் பாராட்டினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஓர் அருட்பணியாளர் கிறிஸ்துவின் கொடையாக இருக்கிறார் என்பது குறித்து இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் பேசிய திருத்தந்தை, ஜூன் 6ம் தேதி கடந்த ஞாயிறன்று போலந்தில் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்ட மறைசாட்சியான அருட்பணி Jerzy Popiełuszko பற்றி விளக்கினார்.

இவ்வாரத்தில் தங்களின் சொந்த மறைமாவட்டங்களில் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்ட Manuel “Lolo” Lozano Garrido மற்றும் குரு Jerzy Popiełuszko பற்றிப் பேசிய அவர், குரு Jerzy, மக்களின் சுதந்திரம், மனித வாழ்வு மற்றும் அதன் மாண்பைப் பாதுகாப்பதற்காகத் தனது பணிக்காலம் முழுவதும் வீரமுடன் போராடியவர் என்று புகழ்ந்தார்.

வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளிடம் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, இக்குருவின் நன்மை மற்றும் உண்மைக்கான பணி, அவர் காலத்தில் போலந்தை ஆட்சி செய்த அரசுக்கு முரண்பாட்டின் அடையாளமாக இருந்தது எனவும், இவர், “இயேசுவின் திரு இதயத்தின்மீது கொண்டிருந்த அன்பே அவர் தனது வாழ்வைக் கையளிக்கத் தூண்டியது எனவும், அவரது சாட்சிய வாழ்வானது, திருச்சபையிலும் சமூகத்திலும் புதிய ஊற்றின் விதையாகவும் இருந்தது” எனவும் கூறினார்.

போலந்தின் புனித Stanislaus Kostka பங்குக் குருவாக பணியாற்றிய குரு Jerzy, சோவியத் அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் தொழிற்சங்கமான Lech Walesa வின் Solidarity தொழிற்சங்கத்தின் ஆன்மீகக் குருவாக 1980களில் இருந்தார். இவர், 1984ல் கம்யூனிச காவல்துறையால் கடத்தப்பட்டு அடிக்கப்பட்டு சாக்கில் கட்டப்பட்ட நிலையில் ஆற்றில் எரியப்பட்டார். சுமார் இரண்டு வாரங்கள் கழித்து அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது அடக்கச் சடங்கில் 5 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும், ஸ்பெயினின் Linares ல் இந்த ஜூன் 12ம் தேதி முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்ட Manuel “Lolo” Lozano Garrid, ஸ்பானிய பத்திரிகையாளர். 28 ஆண்டுகள் சக்கரநாற்காலியில் இருந்தாலும், தனது வேதனையிலும் தனது வாழ்வு மற்றும் எழுத்துக்கள் மூலம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த பொதுநிலை விசுவாசி என்றார் திருத்தந்தை.

ஸ்பானிய உள்நாட்டுச் சண்டையின் போது பத்திரிகையாளராக இருந்த இவர், தனது 17வது வயதில் சிறை சென்றார், 22வது வயதில் விடுதலை செய்யப்பட்டார். வாத நோயால் தாக்கப்பட்ட இவர், 1971ம் ஆண்டு இறப்பதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னர் கண்பார்வையை இழந்தார், எனினும் அமைதியான மகிழ்ச்சி மற்றும் அசையாத விசுவாசத்தால் கிறிஸ்துவிடம் இதயங்களை ஈர்த்தார் என்றும் திருத்தந்தை புகழ்ந்தார்.

சக்கரநாற்காலியில் இருந்து கொண்டே பல ஆன்மீக நூல்களையும் கட்டுரைகளையும் எழுதினார், நோயாளி பத்திரிகையாளருக்கெனச் செபக்குழுவைத் தொடங்கினார், பத்திரிகையாளர்கள் இவரது எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி வாழலாம் என்றும் திருத்தந்தை பரிந்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.