2010-06-15 08:18:41

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது தொடர்வதாக தலத்திருச்சபை கவலையை வெளியிட்டுள்ளது.


ஜூன் 14, 2010. ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது மேலும் தொடர்வதாகவும், கடந்த வாரத்திலும் இரு பகுதிகளில் இந்து தீவிரவாதிகளால் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதாகவும் தலத்திருச்சபை கவலையை வெளியிட்டுள்ளது.

கிறிஸ்தவர்களின் ஜெபக்கூட்டங்கள், ஒன்றிணைவுக்கூட்டங்கள், ஒன்றிணைந்து உணவருந்துதல் என எதையும் ஆற்ற முடியா நிலை இருப்பதாக உரைத்த சம்பல்பூர் மறைமாவட்ட குருகுல அதிபர் குரு அல்ஃபோன்ஸ் தோப்போ, தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

ஒரிசாவின் தியோகார் மாவட்டத்தில் அண்மையில் மதம் மாறிய பூர்வீக இனத்தைச் சார்ந்த பிராங்கி கிஸ்பாட்டா என்பவரும் அவர் மனைவியும் தங்கள் குழந்தை நோயிலிருந்து குணம் பெற்றதற்கென ஏற்பாடுச் செய்திருந்த நன்றி வழிபாட்டில் கலந்து கொள்ள வந்த மூன்று கிறிஸ்தவக் குருக்கள் இந்து தீவிர வாதிகளால் தாக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நான்காண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்தவத்தைத் தழுவிய தலித் சமூகத்தை சேர்ந்த பகத் பிவார் என்பவரைத் தாக்கி அவர் வைத்திருந்த விவிலியப் பிரதிகளையும் எரித்துள்ளது மதத்தீவிர வாதக் குழு ஒன்று.

இவையிரண்டும் கடந்த வாரத்தில் இடம்பெற்ற சம்பவங்களாகும்.








All the contents on this site are copyrighted ©.