2010-06-14 15:45:19

ஜூன் 15 நாளும் ஒரு நல்லெண்ணம்


வாழ்க்கை எனும் நாணயத்தில், இன்பம் ஒருபக்கம்; துன்பம் மறுபக்கம். இன்பங்களில் மட்டுமே மிதந்த அரசனும் இல்லை; துன்பங்களில் மட்டுமே துடித்த ஆண்டியும் இல்லை. ஒவ்வோர் இன்பத்தின் முடிவிலும் துன்பம் ஒன்று இருக்கும். இதே போல், ஒவ்வொரு துன்பத்தின் எல்லையிலும் ஓர் இன்பம் பிறக்கும். மனித வாழ்வில் சுகம் - துக்கம் இரண்டுமே தேர்ச்சக்கரம் போல் சுற்றிச் சுற்றி வரும். மனிதர்களது அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் மனமே. இது அடையமுடியாதவற்றின் மீது ஆசை வைத்து அன்றாடம் அலைபாய்கிறது. ஒன்றை அடைந்து விட்டால் மலையளவு மகிழ்ச்சி கொள்கிறது. விரும்பிய ஒன்றை இழந்து விட்டால் கடலளவு கவலை கொள்கிறது. எள்ளில் எண்ணெய் இருப்பதால்தான், அது செக்கில் அரைபடுகிறது. மனதில் ஆசை அளவற்றுப் பிறப்பதால்தான் அது துயரங்களில் அல்லாடுகிறது. சுகமோ துக்கமோ இரண்டுமே நிலையற்றவை. இன்பம் வரும்போது இதுவும் கடந்து போகும் என்றும், துன்பம் நேரும்போது இதுவும் கடந்து போகும் என்றும் தன்னையே பழக்கிக் கொள்ளும் மனது எப்பொழுதும் மனஅமைதியில் வாழும். 'சுகத்தின் மேல் அமர்ந்துதான் துக்கம் வரும்' என்பது நம் முன்னோர் வாக்கு.








All the contents on this site are copyrighted ©.