2010-06-11 15:40:55

குருக்களின் தவறானப் பாலியல் செயல்களுக்கு மன்னிப்பை இறைஞ்சினார் திருத்தந்தை


ஜூன் 11,2010 கத்தோலிக்கத் திருச்சபையில் குருக்களின் தவறானப் பாலியல் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கடவுளிடமிருந்து மிக உருக்கமுடன் மன்னிப்பை இறைஞ்சினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

அத்துடன், குருக்களின் இத்தகைய தவறானப் பாலியல் நடவடிக்கைகள் இனிமேல் ஒருபொழுதும் இடம்பெறாதிருப்பதற்குத் திருச்சபை தனது அதிகாரத்துக்கு உட்பட்டுத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்றும் திருத்தந்தை உறுதி கூறினார்.

உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் சர்வதேச குருக்கள் ஆண்டின் நிறைவுக் கொண்டாட்டங்களின் முத்தாய்ப்பாக, இவ்வெள்ளி காலை 10 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

ஏறக்குறைய பதினைந்தாயிரம் குருக்களுடன் கூட்டுத் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை, இச்சர்வதேச குருக்கள் ஆண்டில், குருக்களின் பாவங்கள், குறிப்பாகச் சிறாரை அவர்கள் தவறாகப் பயன்படுத்தியது வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் இவ்வாண்டு களங்கப்படுத்தப்பட்டு இருந்தது என்று தெரிவித்தார்.

குருத்துவ அழைத்தல்களுக்காகக் கடவுளிடம் கெஞ்ச வேண்டும் என்றும் உரைத்த திருத்தந்தை, இவ்வாறு குருத்துவத் திருப்பணியில் இளையோரைச் சேர்க்கும் பொழுது அவர்கள் தங்கள் அழைத்தலுக்கு உண்மையாய் நடந்து கொள்வதற்குத் தேவையான எல்லாப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் திருச்சபை தொடர்ந்து உடன் செல்லும் என்று உறுதி கூறினார்.

இவ்வகை உருவாக்குதல் மூலமாகக் குருக்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் மற்றும் துன்பமான சூழல்களில் இறைவன் அவர்களைப் பாதுகாத்து கண்காணித்து வருவதை அவர்கள் உணருவார்கள் என்றும் அவர் கூறினார்.

இயேசுவின் திருஇதய பெருவிழாவான இவ்வெள்ளி குருக்களின் தூய்மை வாழ்வுக்காகச் செபிக்கும் நாளாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இவ்விழாத் திருப்பலியின் பதிலுரைப் பாடலாகக் கொடுக்கப்பட்டுள்ள, ஆண்டவர் என் ஆயன், எனக்கேது குறை என்ற 23ம் திருப்பாடலை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, விசுவாசிகளைத் திசை திருப்பும் தற்போதைய உலகுப் போக்குக்கு எதிராக நின்று விசுவாசத்தைப் பாதுகாப்பதற்குத் திருச்சபை ஆயனின் கோலைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

உண்மையில் இந்தக் கோலைப் பயன்படுத்துவது அன்பின் சேவையாக இருக்க வேண்டும் என்றும் ஆண்டவரின் கோலும் கைத்தடியும் எப்பொழுதும் பாதுகாப்பைத் தருகின்றது என்றும் திருத்தந்தை அறிவித்தார்.

திருச்சபையின் வரலாற்றில் இத்தனை குருக்கள் இணைந்து திருப்பலி நிகழ்த்தியது இதுவே முதன்முறையாகும். இத்திருப்பலியில் புனித ஜான் மரிய வியான்னி பயன்படுத்திய திருப்பலி பாத்திரத்தைத் திருத்தந்தை பயன்படுத்தினார். குருக்களின் பாதுகாவலராகிய இந்தப் புனிதர் இறந்ததன் 150ம் ஆண்டை முன்னிட்டே இந்தச் சர்வதேச குருக்கள் ஆண்டை அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.