2010-06-09 15:50:48

போபால் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் திருச்சபை ஒத்துழைக்கும் - மத்திய பிரதேசத் தலத் திருச்சபை


ஜூன்09,2010 போபால் நச்சு வாயு விபத்து சம்பந்தமான வழக்கில் போபால் நீதிமன்றம் இத்திங்களன்று அளித்துள்ள தீர்ப்பு, நீதியை அவமதிக்கும் ஒரு குற்றம், எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் திருச்சபை அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்று மத்திய பிரதேசத் தலத் திருச்சபை தலைவர்கள் கூறியுள்ளனர்.
25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த விபத்தில், எட்டு பேரைக் குற்றவாளிகள் என்று கூறிய போபால் நீதி மன்றம், அவர்களுக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் வழங்கியிருப்பதாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இவ்வளவு தாமதமாகவும், இவ்வளவு குறைந்த அளவு தண்டனையோடும் கொடுக்கப்பட்டுள்ள இவ்வகைத் தீர்ப்புகளால் மக்கள் வெறுப்படைந்து, பணத்திற்காக குற்றங்கள் புரிபவர்களின் துணையை நாடி, நீதியைத் தேடிக் கொள்ளும் அபாயங்கள் உள்ளன என்று ஜபல்பூர் ஆயர் Gerald Almeida கூறினார்.
இந்த விபத்தின் முக்கிய பொறுப்பாளரான Union Carbide நிறுவனத்தின் தலைவர் Warren Anderson எவ்வகையிலும் தண்டிக்கப்படாமல், அமெரிக்காவில் வாழ்ந்து வருவது இந்திய அரசையும், நீதித் துறையையும் கேலிக்குரியதாய் ஆக்கியுள்ளதென மத்திய பிரதேசத் திருச்சபையின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் அருட்தந்தை Anand Muttungal கூறினார்.நீதிக்குப் புறம்பான இத்தகைய தீர்ப்புகளால் இந்தியர்கள் அனைவரும் அவமானப் படுகிறோம் என்று அனைத்திந்தியத் துறவியர் அவையின் செயலர் அருட் சகோதரர் Mani Mekkunnel கூறினார்.







All the contents on this site are copyrighted ©.