2010-06-09 15:25:34

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


ஜூன்09,2010 சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டின் நிறைவு நிகழ்ச்சிகள் இப்புதனன்று உரோமையில் தொடங்கியுள்ள வேளை, இந்த மாநகரில் எங்கு திரும்பினாலும் பல நாட்டு அருட்பணியாளர்களைக் காண முடிகின்றது. கோடை காலத்தின் வெப்ப அறிகுறிகளும் தெரியத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானப் பயணிகளுக்குப் பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறன்று அவர் நிறைவு செய்த சைப்ரஸ் நாட்டுக்கானத் திருப்பயணம் குறித்த பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

RealAudioMP3 அன்புச் சகோதர சகோதரிகளே, எனது இந்தக் கடந்தவாரச் சைப்ரஸ் நாட்டுக்கானத் திருப்பயணத்தில் அந்தத் தீவுக்கு முதன் முதலில் நற்செய்தியை எடுத்துச் சென்ற புனிதர்கள் பவுல் மற்றும் பர்னபாசின் பாதச் சுவடுகளில் நடந்தேன். அத்தீவின் சிறிய, ஆனால் உயிர்த்துடிப்புள்ள கத்தோலிக்கச் சமூகங்களையும் சந்தித்தேன். அந்த நாட்டு அதிகாரிகளின் இனிய உபசரிப்புக்கு நன்றியும் கூறுகிறேன். மேலும், சைப்ரஸ் ஆர்த்தாடாக்ஸ் சபையின் ஆயர் பேரவை மற்றும் பேராயர் இரண்டாம் கிறிஸ்சோஸ்தோமோஸின் சகோதரத்துவ வரவேற்புக்குச் சிறப்பான விதத்தில் நன்றி செலுத்துகிறேன். மாரனைட் மற்றும் இலத்தீன் ரீதி கத்தோலிக்கச் சமூகங்களுடன் திருவழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது அவர்களுடைய உறுதியான விசுவாசம் மற்றும் பாரம்பரியங்களையும் அவர்களுடைய கல்வி மற்றும் பிறரன்பு நிறுவனங்கள் ஊக்கமுடன் இயங்குவதையும் நேரிடையாகக் காண முடிந்தது. சைப்ரசிலும் மத்தியகிழக்குப் பகுதி முழுவதிலும் வாழும் கிறிஸ்தவர்கள் தங்களுக்கிடையே இருக்கும் பிரிவினைகளை மேற்கொண்டு நற்செய்திக்குச் சான்று பகர்வதில் உறுதியாய் இருப்பதற்கு அழைக்கப்படுகிறார்கள். மத்தியகிழக்குப் பகுதிக்கென இடம்பெறவிருக்கும் சிறப்பு ஆயர் மாமன்றத்திற்கான முன்வரைவுத் தொகுப்பை நிக்கோசியாவில் ஞாயிறன்று நான் நிகழ்த்திய திருப்பலியில் வெளியிட்டேன். இந்த ஆயர் மாமன்றமானது, பழம்பெருமை வாய்ந்த அப்பகுதியின் கிறிஸ்தவச் சமூகங்களை ஐக்கியத்திலும் நம்பிக்கையிலும் உறுதிப்படுத்தவும் மத்தியகிழக்குப் பகுதி முழுவதிலும் அமைதி நிறைந்த எதிர்காலத்தைச் சமைக்கவும் உதவட்டும் எனச் செபிப்போம்.

இவ்வாறு ஆங்கில மொழியில் ஆற்றிய இப்புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, RealAudioMP3 இயேசுவின் திருஇதய விழாவான இவ்வெள்ளியன்று சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டு நிறைவடைகிறது. இதனையொட்டி, உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஆயிரக்கணக்கான அருட்பணியாளர்கள், ஆண்டவருக்கு நன்றி சொல்லவும் தங்களது திருப்பணியைப் புதுப்பிக்கவும் உரோமையில் கூடி யுள்ளனர். விசுவாசிகள் அனைவரும் அவர்களோடு ஒன்றித்து அவர்களுக்காகச் செபிக்குமாறு கேட்டுக் கொண்டார். துருக்கி ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் பதோவேசே கொடூரமான முறையில் இறந்ததையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். பின்னர், பல நாடுகளின் திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தி தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.