2010-06-09 15:48:06

உலக வர்த்தக நிறுவனத்தில் பேசிய ஐ.நாவுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Silvano Tomasi


ஜூன்09,2010 மரபணுக்களை மாற்றி நுண்ணுயிரை உருவாக்க வழங்கப்படும் உரிமை நன்னெறி பிரச்சனைகளை உருவாக்குவதுடன், இந்த உரிமை சரிவர பயன்படுத்தப்படவில்லை எனில், ஏழை நாடுகள் இதனால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் என்று பேராயர் Silvano Tomasi கூறினார்.
இச்செவ்வாயன்று ஜெனீவாவில் உலக வர்த்தக நிறுவனத்தின் வர்த்தகம் சார்ந்த அறிவுச் சொத்துரிமை குழுவில் (TRIPS) பேசிய ஐ.நாவுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Tomasi இவ்வாறு கூறினார்.
நுண்ணுயிர்கள் குறித்து வழங்கப்படும் இந்த உரிமை நன்னெறிக்கு முரணாகச் செல்வதுடன், வளர்ந்து வரும் பல ஏழை நாடுகளின் முன்னேற்றத்தையும் அதிகம் பாதிக்கும் என்று கூறிய பேராயர் Tomasi, உயிர்கள் குறித்த வளங்களில் தனியாருக்கு ஏக உரிமைகள் அளிப்பதால், அடிப்படை உணவு, மருந்துகள் போன்ற தேவைகளில் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என்றும் வலியுறுத்தினார்.தனியாருக்கு வழங்கப்படும் இந்த உரிமைகள், உணவு குறித்த பாதுகாப்புக்குப் பெரிதும் ஆபத்தானது என்றும் உலகம் சார்ந்து எடுக்கப்படும் முடிவுகள் அனைத்து மக்களின், அதிலும் சிறப்பாக நலிந்த மக்கள், ஏழைகள் இவர்களின் நன்மைகளை மனதில் கொண்டு எடுக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் Silvano Tomasi கூறினார்.







All the contents on this site are copyrighted ©.