2010-06-08 16:11:10

தென் இந்தியாவின் பசுமையை வளர்க்க கேரளாவில் உள்ள அனைத்து கிறிஸ்துவ சபைகளும் முயன்று வருகின்றன


ஜூன்08,2010 புவி வெப்பமடைதலைத் தடுக்கவும், தென் இந்தியாவின் பசுமையை வளர்க்கவும் கேரளாவில் உள்ள அனைத்து கிறிஸ்துவ சபைகளும் முயன்று வருகின்றன.
நடக்கும் ஜூன் மாதம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதமாக அறிவித்துள்ள மலன்காரா சிரியன் ஆர்த்தடாக்ஸ் சபை, இம்மாதத்தில் அச்சபையைச் சார்ந்த அனைத்து பங்குகளிலும் 10,000 மரங்களை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
சுற்றுச் சூழல் பிரச்சனைகளைக் குறித்து ஆழமாக விவாதிக்க சீரோ மலபார் சபையும் கொச்சியில் ஆகஸ்ட் மாதம் கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அச்சபையின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் அருட் தந்தை Paul Thelakat கூறினார்.
இப்போது உலகில் வாழும் இத்தலைமுறையினர் சுற்றுச் சூழலைச் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சீர் குலைத்து வருவது உண்மையிலேயே ஒரு பாவம் என்றும், இந்தப் பிரச்சனையைக் கத்தோலிக்க திருச்சபை மிகக் கவலையுடன் சிந்தித்து வருகிறது என்றும் அருட்தந்தை Thelakat மேலும் கூறினார்.
மக்கள் மத்தியில் "பசுமை ஆன்மீக"த்தை வளர்ப்பதில் திருச்சபை மிகவும் ஆர்வமாய் உள்ளதென காஞ்சிரப்பள்ளி ஆயர் Mathew Arackal கூறினார்.இஞ்ஞாயிறன்று புனித யோசேப்புப் பேராலயத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்த திருவனந்தபுரம் லத்தீன் ரீதி பேராயர் சூசை பாக்கியம், பசுமை ஆன்மீகத்தைக் கடைபிடிக்க தன் விசுவாசிகளைக் கேட்டுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.