2010-06-08 16:10:00

இஸ்ராயேல் நவடிக்கையைக் குறித்து வத்திக்கான் வானொலியில் பேராயர் தொம்மாசியின் பேட்டி


ஜூன்08,2010 உதவிக்கப்பலைத் தாக்கி 9 உயிரிழப்புகளுக்குக் காரணமான இஸ்ராயேலின் நடவடிக்கையை ஐ.நா. பொது அவையிலேயே திருப்பீடத்தின் சார்பில் கண்டித்துள்ளதாக அறிவித்தார் பேராயர் சில்வானோ தொம்மாசி.
ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அமைப்புக்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் தொம்மாசி வத்திக்கான் வானொலிக்கு அளித்தப் பேட்டியில், வன்முறைகள் மூலம் ஆக்கபூர்வமான ந்ல்ல விளைவுகளைப் பெறமுடியாது என்ற திருத்தந்தையின் கருத்துக்களை தான் பதிவு செய்துள்ளதாகக் கூறினார்.
சர்வதேசக் கடற்பகுதியில் இடம்பெற்ற இவ்வன்முறை, சர்வதேசச் சட்டங்களும் மனிதாபிமான விதிகளும் இன்றைய உலகில் மதிக்கப்படுவதில்லை என்பதையேக் காண்பிக்கின்றன என்ற கவலையை வெளியிட்டதுடன், இத்தகைய வன்முறைகள் கண்டிக்கப்படவேண்டியவை எனவும் தெரிவித்தார்.
இஸ்ராயேல் நாட்டிற்கு வாழ்வதற்கும் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் இருக்கும் உரிமைகளையும் தான் ஏற்றுக்கொள்வதாக உரைத்த பேராயர் தொம்மாசி, சர்வதேசச் சட்டங்களை மதிப்பது மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலமே உண்மையான பாதுகாப்பைப் பெறமுடியும் எனவும் கூறினார்.மத்தியக்கிழக்குப் பகுதியின் அரசியல் மற்றும் ராணுவ நிலையற்றத் தன்மைகளின் விளைவே இத்தகைய வன்முறைச் செயல்பாடுகள் என மேலும் கூறினார் ஐநாவிற்கான திருப்பீடத்தின் பிரதிநிதி பேராயர் தொம்மாசி.







All the contents on this site are copyrighted ©.