2010-06-07 16:04:24

மாற்றத்தின் கருவிகளாக இளைஞர்களை ஊக்குவிக்க இந்திய ஆயரின் அழைப்பு


ஜூன்07, 2010 இயேசுவின் வாழ்வு மற்றும் படிப்பினைகளை அடிப்படையாகக்கொண்ட புதியதொரு சமூகத்தை உருவாக்க மாற்றத்தின் கருவிகளாக இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் பெல்லாரி ஆயர் Henry D'Souza.
இளைஞர்களிடையே பணியாற்றும் மறைமாவட்ட இயக்குனர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 18வது இந்திய அளவிலான 10 நாள் பயிற்சி முகாமைத் துவக்கி வைத்து உரையாற்றிய ஆயர், இளைஞர்களிடையே பணிபுரிவோர் சிறந்த எடுத்துக்காட்டுகளுடன், இளையோரின் வருங்கால வாழ்வுக் குறித்த நம்பிக்கையை விதைப்பவர்களாக இருக்க வேண்டும் என்றார்.
இளைஞர்களுக்கு வழிகாட்ட முன் வருபவர்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்தவ மதிப்பீடுகளில் மூழ்கி ஊறியவர்களாய் தங்கள் வார்த்தையிலும் செயலிலும் அவைகளை வெளிப்படுத்த வல்லவர்களாய் இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் ஆயர் D'Souza.
வன்முறை மற்றும் குற்றங்களின் அதிகரிப்பு, மனித மாண்பு மீறப்படுதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, உலகாயுதப் போக்குகளின் அளவுக்கு மீறிய நிலை போன்ற சவால்களை இன்றைய இளைய சமுதாயம் எதிர்கொள்கின்றது என்ற ஆயர், இருப்பினும் இன்றைய இளைஞர்கள் மாற்றத்தின் கருவிகளாகச் செயல்பட என்றும் தயாராக உள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.இந்திய ஆயர் பேரவையின் இளைஞர்களுக்கான அவை பங்களூருவில் ஏற்பாடுச் செய்துள்ள இப்பயிற்சி முகாம், வரும் வியாழனன்று நிறைவுக்கு வருகின்றது.







All the contents on this site are copyrighted ©.