2010-06-06 14:52:01

ஜூன் 6 உழைப்பின் கருவி (Instrumentum Laboris) என்ற மத்திய கிழக்கு சிறப்பு ஆயர் பேரவையின் முன்வரைவு திட்ட ஏட்டினை வழங்கும் போது, திருத்தந்தையின் உரை


மத்திய கிழுக்கு பகுதிக்கான சிறப்பு ஆயர் பேரவையின் ஆரம்பப் பணிகளைத் திறம்பட செய்திருக்கும் உங்களை நான் பாராட்டுகிறேன். இந்தப் பேரவையின் இறுதி கட்ட பணியில் ஈடுபட்டிருக்கும் உங்களுக்கு என் செபங்கள் உரித்தாகுக.
துருக்கிய கத்தோலிக்க ஆயர்களின் தலைவராகச் சிறப்பாக பணியாற்றிய மறைந்த ஆயர் Luigi Padoveseஐ இந்நேரம் சிறப்பாக நினைவு கூறுகிறேன். உழைப்பின் கருவி (Instrumentum Laboris) என்ற சிறப்பு ஆயர் பேரவையின் முன்வரைவு திட்ட ஏட்டிற்கு ஆயர் Padovese ஆற்றிய பணிகள் ஏராளம். அவரது இந்த எதிர்பாராத, அதிர்ச்சி தரும் மரணம் நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்த ஒரு சூழ்நிலையிலும் நன்மை, உண்மை, நீதி ஆகியவற்றிற்கு சான்றுகளாக நாம் வாழ வேண்டும் என்பதை ஆயர் அவர்களின் மரணம் நமக்கு நினைவு படுத்துகிறது.
"ஒரே மனமும், ஒரே ஆன்மாவும்" என்ற இந்த ஆயர் பேரவையின் மையப் பொருள் ஒருமைப் பாட்டிலும், சான்று பகர்வதிலும் நாம் வாழ வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக் காட்டுகிறது.
நம் முன்னோரின் தந்தையாம் இறைவன், தன்னை முதன் முதலாக வெளிப்படுத்தியது மத்திய கிழக்கு நாடுகள் என்பதால், இந்தப் பகுதி கிறிஸ்துவர்களின் மனதில் தனிப்பட்ட ஒரு இடத்தை வகிக்கிறது. ஆபிரகாமின் அழைப்பு துவங்கி, கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பு வரை இறைவனின் மீட்புச் செயல்கள் தனி மனிதர்கள், குழுக்கள் மூலமாக நிகழ்ந்ததெல்லாம் இந்த நாடுகளில்தான். இங்கிருந்துதான் நற்செய்தி உலகெங்கும் அறிவிக்கப்பட்டது. எனவே, இந்தப் பகுதி கிறிஸ்தவ உலகத்தில் தனி மரியாதை பெற்றுள்ளது.
இப்பகுதியில் விசுவாசத்திற்காக மக்கள் படும் துன்பங்களை உலகம் கண்டுகொள்ளவும், இந்தத் துயரங்களுக்குத் தீர்மானமான முடிவுகளை அடையவும் நடைபெற விருக்கும் மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் பேரவை உதவியாக இருக்கும் என நம்புகிறேன். மத்திய கிழக்குப் பகுதிகளில், சிறப்பாக, புனித பூமியில் நிலவும் அமைதியற்ற, பதட்டமானச் சூழலுக்கு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து நீடித்த அமைதியைக் கொண்டு வர பாடு பட வேண்டும்.இந்த எண்ணங்களுடன், உழைப்பின் கருவி (Instrumentum Laboris) என்ற மத்திய கிழக்கு சிறப்பு ஆயர் பேரவையின் முன்வரைவு திட்ட எட்டினை உங்களுக்கு அளிக்கிறேன். இறைவன் உங்கள் பணிகளைச் சிறப்பாக ஆசீர்வதிப்பாராக!







All the contents on this site are copyrighted ©.