2010-06-05 16:36:55

சைப்ரஸ் குடியரசின் அரசு அதிகாரிகள், அயல்நாட்டு பிரதிநிதிகளுக்கு திருத்தந்தையின் உரை


எனது அப்போஸ்தலிக்க பயணத்தின் ஒரு பகுதியாக, சைப்ரஸ் குடியரசின் அரசுத் தலைவர்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அரசுத் தலைவர் Christofias தெரிவித்த வாழ்த்துக்களுக்கு நன்றி.
சைப்ரஸ் குடியரசின் முதல் அரசுத் தலைவரான பேராயர் Markariosன் நினைவு மண்டபத்தில் சற்று முன் ஒரு மலர் வளையம் வைத்தேன். அவரைப் போல் நீங்கள் ஒவ்வொருவரும் பொது சேவையில் ஈடுபட வேண்டும் என விழைகிறேன். பொது அரசு சேவையைத் திருச்சபை என்றும் உயர்வாக எண்ணி வந்துள்ளது. இப்பொது சேவையில் முழுமையாக ஈடுபடும் போது, ஒவ்வொருவரும் ஞானம், முழுமை, தன்னிறைவு ஆகியவற்றை பெற முடியும். நேரிய எண்ணங்களோடு உண்மை, நன்மை, அழகு ஆகிய உயரிய கோட்பாடுகளை பின்பற்றுவதை ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் வழி வந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய அறிஞர்கள் உரைத்துச் சென்றனர்.

சமய அடிப்படையில் பார்க்கையில், நாம் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்ட மனித குடும்பத்தைச் சேந்தவர்கள், அந்தக் குடும்பத்தின் ஒற்றுமையை வளர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
ஒவ்வொரு மனிதனோடும் உறவுகளை வளர்ப்பதே, நம்பிக்கையை வளர்க்கும் முதல் படி. அத்தகைய உறவும், நம்பிக்கையும் ஒரு நாட்டையும், அரசையும் கட்டி எழுப்பும் அடிப்படைகள். பிரச்சனைகள் அதிகம் சூழ்ந்த அரசியலில், இப்படிப்பட்ட தனி நபருடனான உறவுகள் உறுதியான சமுதாயத்தை உருவாக்க உதவும். இப்படிப்பட்ட உறவுகளை வளர்க்க இங்குள்ள அனைவரையும் நான் சிறப்பாக கேட்டுக் கொள்கிறேன்.

நன்னெறியில் உறுதியாக வாழும் மனிதர்களாலேயே பொது நலனை உருவாக்க முடியும் என்று பாரம்பரிய கிரேக்க தத்துவம் உரைக்கின்றது. பொது வாழ்வைக் குறித்து எடுக்கப்படும் முடிவுகள் சுய நலத்தையும், ஒரு சிலரது நலனையும் தாண்டி நன்னெறியின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்.
உண்மையை எப்போதும் பின் தொடர்ந்து செல்லும் போது, உலகில் பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை நிறைந்த சமுதாயம் உருவாக வழியாகும்.

உண்மையைப் பின் தொடர்வதை மூன்று வழிகளில் காணலாம்:

ஒன்று - ஒரு நிகழ்வைக் குறித்த நேர்மையான, அப்பட்டமான தகவல்களைப் பெறும் போது, எந்த ஒரு பக்கமும் சாயாமல், நடு நிலையோடு அந்த நிகழ்வைக் குறித்த முடிவுகளை எடுக்க முயல வேண்டும்.
இரண்டு - ஒவ்வொரு அரசியலுக்கும் ஏற்றது போல் சமாதானம், முன்னேற்றம், மனித உரிமைகள் என்ற கோட்பாடுகளைத் திரித்துக் கூறுவது இன்றைய காலத்தில் அதிகம் காணப்படுகிறது. இதற்கு மாறாக, உண்மைகளைத் திரிக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மூன்று - இயற்கை நியதிகளின் அடிப்படையில் மனிதர்களாகிய நாம் இயற்றும் சட்டங்கள் அமைய வேண்டும். பிறர் உரிமைகளையும், அடிப்படை மனித மாண்பையும் மதிக்கும் வகையில் நம் சட்டங்கள் அமைய வேண்டும்.
அரசுத் தலைவரே, அருமை நண்பர்களே, நீங்கள் அனைவரும் தகுந்த ஞானத்துடனும், உறுதியுடனும், விடா முயற்சியுடனும் உங்கள் பணிகளைத் தொடர இறைவனின் ஆசீரை நான் வேண்டுகிறேன்.







All the contents on this site are copyrighted ©.