2010-06-05 16:37:08

சைப்ரஸ் கத்தோலிக்கர்களுக்கு திருத்தந்தையின் உரை


கிறிஸ்துவில் என் அன்பு சகோதர, சகோதரிகளே,
உங்கள் சார்பில் என்னை வரவேற்ற பேராயர் Soueif க்கும், அழகானதொரு பரிசை எனக்கு அளித்த குழந்தைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பிதாப் பிதா Fouad Twalக்கு என் அன்பு வாழ்த்துக்கள். மிகுந்த பொறுமையோடு புனித பூமியை பராமரித்து வரும் புனித பிரான்சிஸ் சபையினரின் சார்பில் இங்கிருக்கும் அருட்தந்தை Pizzaballaவையும் அவர்களது துறவு சகோதரர்களையும் சிறப்பான வகையில் வாழ்த்துகிறேன்.
உரோமையின் ஆயராக முதல் முறையாக சைப்ரஸ் வந்துள்ள நான், உங்களை விசுவாசத்தில் உறுதிப் படுத்தவும், தொடர்ந்து அப்போஸ்தலிக்கப் பாரம்பரியத்தில் நீங்கள் ஒரே மனதோடு நிலைத்திருக்கவும் விழைகிறேன். பேதுருவின் வழித் தோன்றல் என்ற முறையில் எனது முழு ஆதரவையும், செபங்களையும் உங்களுக்கு அளிக்கிறேன்.

இயேசுவின் செயல்களைப் பற்றி கேள்விப்பட்ட கிரேக்கர்கள் சிலர் இயேசுவைக் காண விழைவதாகக் கூறிய அந்த யோவான் நற்செய்தியின் பகுதியை இப்போது வாசிக்கக் கேட்டோம். நற்செய்தியில் நாம் காணும் மனிதர்களைப் போல், நாமும் இயேசுவைக் காண, அவரை அறிந்து, அன்பு செய்து, அவருக்குப் பணி செய்ய விழைகிறோம்.
திருச்சபையின் வாழ்வில், பணியில் நீங்கள் வகிக்கும் தனிப்பட்ட பங்கை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன். கிறிஸ்துவர் அல்லாத மற்றவர்களோடும், ஏனைய கிறிஸ்தவர்களோடும் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய உரையாடல், அதன் வழியாக நீங்கள் காண வேண்டிய ஒப்புரவு ஆகியவை உங்களுக்கு உள்ள சிறப்புப் பங்கு.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு, திருமுழுக்கு பெற்ற அனைத்து மக்களோடும் உறவு கொள்வதென்பது திருச்சபையின் கடமையாகிறது. இந்த உறவை, உரையாடலை நீங்கள் வலுப்படுத்த நான் வாழ்த்துகிறேன்.
பிற சமயங்களுடன் நீங்கள் கொள்ள வேண்டிய உறவு, உரையாடல் இவற்றில் பொறுமையோடும், தெளிவோடும் செயல் பட வேண்டும். நீங்கள் மற்ற மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அதன் வழியாக, சமாதான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

அன்பு சகோதர, சகோதரிகளே, இந்த குருக்கள் ஆண்டு முடிவுக்கு வரும் இந்த நேரத்தில், குருத்துவ, துறவற அழைப்புக்காக வேண்டிக் கொள்ளுங்கள். முழுமையான அர்ப்பணத்துடன் மக்களுக்கு உழைக்கும் குருக்கள் உருவாக வேண்டும் என்றும் மன்றாடுங்கள்.
நாம் இங்கு கூடியிருக்கும் இந்த பள்ளி உட்பட, இந்த நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக நான் சொல்ல விழைவது இது: சைப்ரஸ் திருச்சபையின் பாரம்பரியத்தில் உங்கள் பங்கு அதிகம். தொடர்ந்து நீங்கள் இந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அயராது, பொறுமையோடு உழைக்கும்படி உஙகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
இறுதியாக, அன்பு சகோதர, சகோதரிகளே, உங்கள் அனைவரையும் அன்னை மரியாவின் கண்காணிப்பில் ஒப்படைக்கிறேன். புனித பவுல், பர்னபா இவர்களின் வேண்டுதலால் நீங்கள் வாழ வாழ்த்துகிறேன்.







All the contents on this site are copyrighted ©.