2010-06-04 16:16:31

சிறுபான்மையினருக்கான முன்னேற்றங்கள் ஏழைகளைச் சென்றடையவில்லை - இந்திய திருச்சபை அதிகாரிகள்


ஜூன்04,2010 இந்திய அரசு இப்புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி மத சிறுபான்மையினர் சமுதாயம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை ஓரளவு ஏற்றுக் கொண்டாலும், இந்த முன்னேற்றங்கள் எவ்வளவு தூரம் ஏழைகளைச் சென்றடைந்துள்ளன என்பதைக் குறித்த தங்கள் ஐயங்களையும் எழுப்பியுள்ளனர் இந்திய திருச்சபை அதிகாரிகள்.
சிறுபான்மையினருக்கு இன்னும் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் தன் அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார் எனினும், இந்த வேலை வாய்ப்புகள் ஏழைகளையும், தாழ்த்தப்பட்டோரையும் உண்மையிலேயே சென்று அடையவில்லை என்று இந்திய ஆயர் பேரவையின் தாழ்த்தப்பட்டோர் குழுவின் செயலர் அருட் தந்தை காஸ்மோன் ஆரோக்கியராஜ் கூறினார்.
2007 ஆம் ஆண்டு சிறுபான்மையினர் மத்தியில் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் 6.9 விழுக்காடு என்று இருந்த நிலை 2009 ஆம் ஆண்டு 9.24 விழுக்காடாக உயர்ந்துள்ளதென அரசு அறிக்கை கூறியுள்ளது.2007 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்த வேலை வாய்ப்புத் திட்டங்களால் நகரங்களில் உள்ள சிறுபான்மையினரே அதிகம் பயன் பெற்றுள்ளனர் என்றும், இந்தத் திட்டங்களால் கிராமங்களில் உள்ளவர்கள் பயன் பெறவில்லை என்றும் அருட்தந்தை ஆரோக்கியராஜ் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.