2010-06-04 16:17:47

இயற்கை வளங்களைச் சீரமைப்பது செல்வத்தைப் பெருக்கும் - ஐ.நா.வின் அறிக்கை


ஜூன்04,2010 காடுகள், ஏரிகள், குளங்கள், ஆறுகள் என்று அனைத்து இயற்கை வளங்களையும் சீரமைப்பது செல்வத்தைப் பெருக்குவதோடு, வேலை வாய்ப்பினை அதிகரிக்கவும், வறுமையை நீக்கவும் வழி வகுக்கும் என்று ஐ.நா.வின் சுற்றுச் சூழல் திட்டக் குழுவின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள 30 வேறுபட்ட முயற்சிகளை எடுத்துக் காட்டி, அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதை இவ்வியாழனன்று வெளியான இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
'இறந்த பூமிக் கோளம், வாழும் பூமிக் கோளம்' என்ற தலைப்புடன் வெளியாகியுள்ள இந்த அறிக்கையில், இந்த முயற்சிகள் பெரும் முதலீடுகள் இன்றி எளிய வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், இவற்றால் விளைந்துள்ள பலன்கள் பெருமளவானவை என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
நமது பூமியின் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பணியால் மனித குலத்திற்கு ஆண்டொன்றுக்கு 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்வங்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு என்று ஐ.நா.வின் சுற்றுச் சூழல் திட்டக் குழுவின் இயக்குனர் Achim Steiner கூறினார்.அகில உலக பல்லுயிர் ஆண்டான 2010ல் வெளியாகியுள்ள இந்த அறிக்கை, இயற்கையை, சுற்றுச் சூழலைக் குறித்த தெளிவை அரசுகளுக்கும், மக்களுக்கும் அளிக்கும் என்ற தன் நம்பிக்கையை Steiner தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.