2010-06-02 15:58:58

வன்முறை பிணக்குகளுக்குத் தீர்வாக அமையாது - திருத்தந்தை


ஜூன்02, 2010 வன்முறை, பிணக்குகளுக்குத் தீர்வாக அமையாது, மாறாக, அது தீய விளைவுகளையும் வன்முறையையும் மேலும் அதிகரிக்கும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இப்புதன் மறைபோதகத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானப் பயணிகள் முன்பாக இவ்வாறு உரைத்த திருத்தந்தை, புனித பூமியின் Gazaவுக்கு அருகில் இத்திங்கள் காலை இடம் பெற்ற கொடும் வன்முறைச் சம்பவம் தனக்கு மிகவும் வேதனை அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
சர்வதேச மனிதாபிமான உதவிகளை ஏற்றிக் கொண்டு Gaza பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த கப்பல் இத்திங்கள் காலை இஸ்ரேல் இராணுவத்தால் தாக்கப்பட்டதில் 19 பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு, இந்தியா உட்பட பல நாடுகளிலிருந்து சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கெதிரானக் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியை விரும்பும் அனைவருக்கும் இத்தாக்குதல் கவலை அளித்திருப்பதாகவும் இதில் பலியானவர்களுக்குத் தனது இதயப்பூர்வமான அனுதாபத்தைத் தெரிவிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை.
மக்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவும், நல்லிணக்கம் மற்றும் நிம்மதியுடன் வாழவும் வழிவகுக்கும் நீதியுடன்கூடிய தீர்வுகளை உரையாடல் மூலம் கொண்டு வருவதற்கு அரசியல் அதிகாரிகளும் உள்ளூர் மற்றும் சர்வதேச அதிகாரிகளும் சோர்வின்றி உழைக்குமாறு திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.மேலும், இச்செவ்வாயன்று எகிப்து நாடு, காசா மக்களுக்குத் தன் எல்லைகளைத் திறந்து விட்டுள்ளதையடுத்து மக்கள் புலம் பெயர்ந்து வருகின்றனர். தற்சமயம் காசாவில் 15 இலட்சம் பேர் வாழ்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.