2010-06-01 10:59:17

திருப்பாடல்கள் 14,15 – ஜீவகாருண்யம் சொர்க்கவாசல் திறவுகோல்


ஜூன்01,2010 நமது நேயர் ஒருவர் சவுதியிலிருந்து நம்மை தொலைபேசியில் அழைத்தார். ஹலோ, எப்படி இருக்கிறீங்க என்று வழக்கம் போல நாம முதலில் கேட்டோம். நமது வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகளை அதிகாலை நான்கு மணிக்கு எழும்பிக் கேட்கிறேன். ஒருநாள் களைப்பாய்த் தூங்கிவிட்டாலும் எதையோ இழந்தது போல் இருக்கும். நான் வேலை செய்யும் வீட்டு எஜமானிஅம்மா முதலில் நான் வானொலி கேட்பதற்கு அனுமதி தரவில்லை. ஏனென்றால் காலையில் தூக்கம் போய்விட்டால் பகலில் நான் ஒழுங்காய் வேலை செய்ய மாட்டேன் என்று சொன்னார்கள். ஆனால் நான் வேலை செய்வதைப் பார்த்து இப்பொழுது அனுமதி தந்து விட்டார்கள் என்று சொன்னவர், கொஞ்ச நாளாகவே மனதுக்கு ரொம்பக் கஷ்டமாகவே இருக்கு. நான் கஷ்டப்பட்டு வீட்டுவேலை செய்து சம்பாதித்து அனுப்பும் பணத்தை நாட்டுல இருக்கிற எனது ஒரே மகனும் மருமகளும் என்ன செய்றாங்கனு தெரியல. நான் விதவை. நான் பட்ட கடனை அடைக்கிறதுக்காக நிறைய பணம் அனுப்பினேன். ஆனால் அவுங்க அதை வேறு எதுக்கோ செலவு செய்கிறாங்க. கேட்டா ஒழுங்கான பதில் கிடைக்கல. போதுமான பணம் அனுப்பிவிட்டேன். கடனாளிகள் என்னைத் தொந்தரவு செய்கிறார்கள் என்று அழுது கொண்டே சொன்னார்கள். இதே மாதிரி ஏற்கனவே எனக்குத் தெரிந்த சில சம்பவங்களை நினைத்துப் பார்த்தேன். எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும், உலகே உன் நிலைதான் மாறாதா? கடவுளே, எளியோர் தொடர்ந்து சுரண்டப்பட்டுக்கொண்டுதான் இருப்பார்களா? இந்தக் கேள்விக்குத் திருப்பாடல் 14ல் விடை கிடைப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.

இந்த உலகில் இரண்டு விதமான அறிவிலிகள் இருக்கிறார்கள். ஒரு வகையினர், கேலிக்குரிய செயல்களைச் செய்து மற்றவர்களைச் சிரிக்க வைப்பவர்கள். மற்றொரு வகையினர் தீய செயல்களைச் செய்பவர்கள், அதேமயம் தாங்கள் தீயது செய்கின்றோம் என்ற உணர்வே இல்லாதவர்கள். இவர்களுக்குத் தங்கள் நிலை குறித்து வெட்கமே இருக்காது. இவர்கள் தங்களது அறியாமையால் அல்லாமல், தீய நடத்தையால் முட்டாள்கள் என்று காட்டிக் கொள்கிறவர்கள். இந்த இரண்டாவது வகை அறிவிலிகள் பற்றி சாமுவேல் முதல் புத்தகம் 25ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். நாபால் என்பவன் செல்வமிக்கவன். அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும் ஆயிரம் வெள்ளாடுகளும் இருந்தன. தாவீது தம் ஆட்களுக்கு உணவு உதவி கேட்டு நாபாலிடம் ஆள்களை அனுப்பினார். ஆனால் நாபாலோ எங்கிருந்தோ வந்த மனிதர்களுக்கு நான் அடித்துச் சமையல் செய்த இறைச்சியைக் கொடுப்பதா? என்று சொல்லி அவர்களைப் புறக்கணித்தான். பசியோடு திரும்பிச் சென்ற தாவீதின் ஆட்கள் நடந்ததைச் சொன்னார்கள். இந்தச் சூழ்நிலையை வைத்து தாவீது ஆண்டவரிடம் செபிக்கிறார். நாபால் என்றாலே மூடன் என்று அர்த்தம்.

ஆண்டவரே, இந்த உலகம் அறிவிலிகளால் நிறைந்துள்ளது. இவர்கள் கடவுள் இல்லை எனத் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர். அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். நல்லது செய்வார் எவருமே இல்லை என்று மன்றாடுகிறார் தாவீது.

கடவுள் இல்லை என்று சொல்வது அவர் உலகில் செயலாற்றும் தன்மையை மறுப்பதாகும். கடவுள் நல்லது செய்கிறார், ஏழையரின் கடவுளாயிருந்து எளியோருக்கு உதவுகிறார் என்று உணராதிருப்பதாகும். கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள் அறிவிலிகள், முட்டாள்கள். இவர்கள் கடவுளுடைய இருப்பைக் கொள்கையளவிலேயே மறுக்கிறவர்கள். அத்துடன், அவரை ஏற்றாலும் அவர்வழி நடவாதவர்கள். மொத்தத்தில் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள், ஏழை எளிய மக்களைக் கசக்கிப் பிழிந்து அவர்களுக்கு அநீதி செய்து அவர்களைத் துன்புறுத்துபவர்கள். பிறரன்புக்கும் நீதிக்கும் எதிரான அருவருப்பானச் செயல்களைச் செய்பவர்கள். எனவே இவர்கள் கடவுளை அடையவும் முடியாது. கடவுளை நோக்கிச் செபிக்கவும் முடியாது.

நோவா காலத்தில் என்ன நடந்தது?, பாவத்தில் மூழ்கிய சோதோம் கொமாரா நகரங்களுக்கு என்ன நடந்தது? என்பதை நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம். கடவுள் நோவாவிடம், மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது. மனிதர் எல்லாரையும் ஒழித்துவிடப்போகிறேன் (தொடக்க நூல் 6,12-13) என்று சொன்னார். அதன்படி நீதிமான் நோவா குடும்பம் தவிர மக்கள் அனைவரும் பெருவெள்ளத்தால் அழிக்கப்பட்டனர். இக்காலத்தில் இடம் பெறும் பெருவெள்ளம், பூகம்பங்கள் போன்ற இயற்கைச் சீற்றங்களைக் கண்டு சிலர் இவை கடவுளின் கோபத்தின் வெளிப்பாடு என்கின்றனர். அண்மையில் ஆந்திர மாநிலத்தின் காளஹஸ்தி கோயில் கோபுரம் இடிந்தது பற்றிக்கூட இப்படிச் சிலர் சொல்வதாகவும், கோபுரம் மொத்தமாக இடிந்து விழும் அளவுக்குச் சமூகத்தில் அதர்மம் நடந்திருக்கிறது என்றுதானே பொருள் என்று ஒரு சாஸ்திரிகள் சொன்னதாகவும் பத்திரிகை ஒன்றில் வாசித்தோம்.

எனவே திருப்பாடல் 14ன்படி, ஆண்டவரை அறிவது என்பது பிறரை அன்பு செய்து அவர்களுக்கு நீதி வழங்குவதாகும். பிறரை அன்பு செய்து நீதி வழங்காதவர்கள் அறிவிலிகள், கடவுள் இல்லை என்று சொல்பவர்கள், கடவுள் பயமின்றி வாழ்பவர்கள். அதேசமயம் கடவுளின் சந்நிதிக்குச் செல்வதற்கும் அவசியமாக இருப்பது பிறரன்புதான் என்று திருப்பாடல் 15ல் வாசிக்கிறோம். நான் கடவுளை அன்பு செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தன் அருகில் வாழும் சகோதரனை வெறுத்தால் அவன் பொய்யன் என்று யோவான் சொல்வது போல, அடுத்திருப்பவனை அன்பு செய்யாதவன் கடவுளைக் காண முடியாது.

நான் பிறரை அன்பு செய்கிறேன் என்று யாராவது நெஞ்சை நிமிர்த்திச் சொன்னால், அவரிடம் பத்துக்குணங்கள் இருக்க வேண்டும் என்று 15ம் திருப்பாடலில் ஆசிரியர் சொல்கிறார்.

நேரியவற்றைச் செய்பவர், உளமார உண்மை பேசுபவர், தம் நாவினால் புறங்கூறாதவர், தம் தோழருக்குத் தீங்கிழையாதவர், தம் அடுத்தவரைப் பழித்துரையாதவர், நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுபவர், ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பவர், தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறாதவர், தம் பணத்தை வட்டிக்குக் கொடாதவர், மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறாதவர்.

மத்திய கிழக்கு நாடுகளில் நூற்றுக்கு 33.5 விழுக்காடு அல்லது 50 விழுக்காடு வட்டி வாங்குவது வழக்கமாக இருந்தது. இஸ்ரயேல் மக்கள் வேற்று இனத்தவரிடம் வட்டிக்குப் பணம் கொடுக்கலாம். ஆனால் தமது இனத்தவரிடையே, குறிப்பாக தம் இனத்து ஏழைகளிடம் இவ்வாறு வட்டி வாங்குவது சட்டப்படி குற்றமாகும். எனினும் இதனை மக்கள் நடைமுறைப்படுத்தவில்லை. எனவேதான் திருப்பாடல் ஆசிரியர் இவ்வாறு செபித்தார்.

அன்பு நேயர்களே, இறைவனை அடைவதற்கும் அவரைக் காண்பதற்கும் இருக்கும் ஒரே திறவுகோல் பிறரது துயர் நீக்கும் பெருங்கருணைதான். “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” (மத்.25, 31-46 ) என்று இயேசுவும் சொல்லியிருக்கிறார். விக்டர் ஹ்யூகோ என்ற ப்ரெஞ்ச் படைப்பாளி சொன்னார் : “வாழ்க்கை என்பது தன்னிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடுப்பது. அடுத்தவரிடமிருந்து எதையும் எடுப்பது அன்று” என்று. ஆங்கில அறிஞர் பேகன் சொன்னார் : “அன்பில்லாத இடத்தில் மனித முகங்கள் வெறும் படங்கள். அவர்கள் பேசும் பேச்சு, உயிரில்லாத கிண்கிணி ஓசை” என்று. புனித பவுல் அடிகளாரும், உண்மை அன்புக்குப் பகைமை இல்லை, வேற்றுமை இல்லை, ஆணவம் இல்லை, தன்னலம் இல்லை என்றார். ஆம். அன்பு எங்கே இருக்கின்றதோ அங்கே இறைவன் இருக்கின்றார்.

அரபு இலக்கியத்தி்ல் ஓர் அற்புதமான செய்தி இருக்கிறது. சமயநெறிகளை முழுமையாக வாழ்ந்த சுலைமான் என்பவர் இறந்து இறைவன்முன் நிறுத்தப்பட்டார். இறைவன் அவரிடம், மகனே, உனக்கு இந்த வாழ்வு எப்படி கிடைத்தது என்று தெரியுமா என்று கேட்டதற்கு, அவர் ஐயனே உன்னை தினமும் ஐந்துமுறை மறவாமல் தொழுதேன், அதனால் கிடைத்திருக்கலாம் என்றார். அப்போது ஆண்டவன் அவரிடம், இல்லை மகனே, ஒரேயொருவேளை மட்டும் உனக்கு என்னைத் தொழ முடியாமல் போனது, அதற்காகத்தான் என்றார். புரியவில்லையே. சொல்கிறேன் கேள். மகனே, ஒரு குளிர்காலத்தி்ல் வைகறைப்பொழுதில் தொழுகைக்குப் புறப்பட்டாய். அப்போது கடும் பனியில்வாடி குளிரில் நடுங்கித் தவித்த ஒரு சிறிய உயிர் உன் கண்ணில் பட்டது. அதற்கு உதவி செய்ததில் உனது தொழுகை நேரம் முடிந்துவிட்டது. பிற உயிர்களிடத்து காட்டும் பெருங்கருணையே எனக்கு மிகவும் பிடித்தமானது என்றார் இறைவன்.

இந்த இறைவன்மேல் கொண்ட தாகமே, அன்பே, கல்கத்தா அன்னை தெரேசாவின் கண்களில் கருணையைச் சொரிய வைத்தது. உறவுகளால் விலக்கப்பட்டு வீதிகளிலும் சாக்கடைப் பகுதிகளிலும் சாவை நோக்கிச் சரிந்த நோயாளிகள், அநாதைகள், ஆதரவற்றோர், முதியோர் அனைவருக்கும் அவரது மடி தலையணையானதும் இதனால்தான். இந்த அன்னையின் மடியில் அன்பைத்தேடி ஆறுதல் அடைந்த ஆதரவற்றவர்களில் இந்துக்களும் இசுலாமியரும் சீக்கியர்களுமே அதிகம். உண்மைதான். உண்மையான அன்புக்கு மதமும் கிடையாது, ஜாதியும் கிடையாது. மொழியும் கிடையாது. மனிதரில் கடவுளின் சாயலைப் பார்க்கும் போது இந்தப் பேதங்கள் இருக்காது.

எல்லா உயிர்களிடத்தும் கடவுள் நிறைந்திருப்பதை அறிதலே ஈசுவர பக்தி என்றார் வள்ளலார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்றார் விவேகானந்தர். சொர்க்க வாசல் திறக்கப்பட வேண்டுமா, இன மத வேறுபாடின்றி எல்லாரையும் அன்பு செய்வோம். பிறரன்பு ஒன்றே நம்மை யார் என்று உலகுக்கு வெளிப்படுத்தும் அணையா தீபம்.








All the contents on this site are copyrighted ©.