2010-06-01 13:09:45

திருத்தந்தை – முதியோர் மற்றும் தேவையில் இருப்போருக்கு மறைப்பணியாற்ற அழைக்கப்படுகிறோம்


ஜூன்01,2010 தன்னிலே மறைப்பணி இயல்பைக் கொண்டுள்ள திருச்சபை எல்லாக் கலாச்சாரத்திற்கும் ஒவ்வோர் ஆணுக்கும் பெண்ணுக்கும் நற்செய்தி அறிவிப்பதற்கான அழைப்பைக் கொண்டுள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

அன்னைமரியா எலிசபெத்தைச் சந்தித்த திருவிழாவான இத்திங்கள் இரவு வத்திக்கான் தோட்டத்தில் ஜெபமாலை செபித்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு வத்திக்கான் மாதா கெபியில் மறையுரையாற்றி ஆசீர்வதித்த திருத்தந்தை, அன்னைமரியாவின் மறைப்பணி குறித்துப் பேசினார்.

மலைநாட்டில் வாழ்ந்த எலிசபெத்திற்கு அன்னைமரியா உதவச் சென்றது ஓர் உண்மையான மறைப்பணிப் பயணம் என்று விளக்கிய திருத்தந்தை, தனது அன்றாட வாழ்க்கைப் பழக்கங்களோடு தொடர்பில்லாத இடத்திற்கு மரியா சென்றது போல, கிறிஸ்தவர்களாகிய நாமும் நம் வாழ்வுக்கு வெளியேயான பணியில் ஈடுபட நம்மை அர்ப்பணிக்க வேண்டுமென்று பரிந்துரைத்தார்.

முதிர்ந்த வயதில் கடவுள் அருளால் கருவுற்றிருந்த எலிசபெத்துடன், இளம் வயது மரியா மூன்று மாதங்கள் உடனிருந்து அவருடனான தனது அன்பின் நெருக்கத்தை வெளிப்படுத்தினார் என்றும், எலிசபெத், பல முதியோர், நோயாளிகள் மற்றும் தேவையில் இருப்போரின் அடையாளமாக இருக்கின்றார் என்றும் திருத்தந்தை கூறினார்.

நமது குடும்பங்களிலும் சமூகங்களிலும் நகரங்களிலும் பலர் நமது உதவியை எதிர்பார்த்து இருக்கின்றனர், இவர்களுக்கு, மரியா போன்று நற்செய்தியை அறிவிக்கவும் உண்மையான மறைப்பணியாளர்களாகச் சேவை செய்யவும் நாம் அழைக்கப்படுகிறோம் என்றும் விசுவாசிகளிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.