2010-05-31 14:37:08

முத்திப்பேறு பெற்ற மரிய பியெரினா தெ மிக்கேலே கிறிஸ்துவின் திருமுகத்தின் மீது அசாதாரண பக்தி கொண்டிருந்தவர் - திருத்தந்தை


மே31,2010 மேலும், இஞ்ஞாயிறு காலை புனித மேரி மேஜர் (Mary Major) பசிலிக்காவில் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்ட அன்னை மரிய பியெரினா தெ மிக்கேலே (Maria Pierina De Micheli), கிறிஸ்துவின் திருமுகத்தின் மீது கொண்டிருந்த அசாதாரண பக்தியை இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் புகழ்ந்து பேசினார் திருத்தந்தை.

அமலமரிப் பதல்விகள் சபையைச் சேர்ந்த இந்தப் புனிதையின் வாழ்வு பற்றியும் பேசிய திருத்தந்தை, 1890ம் ஆண்டு இத்தாலியின் மிலானில் பிறந்த Maria Pierina De Micheli, தனது 23வது வயது தொடங்கி அவர் இறந்த 1945ம் ஆண்டு வரை அர்ஜெண்டினாவிலும் இத்தாலியிலும் கல்விப்பணிக்குத் தம்மை அர்ப்பணித்திருந்தார் என்றார்.

இவர் கிறிஸ்துவின் திருமுகத்தின் மீது கொண்டிருந்த அசாதாரண பக்தியை அவரது சோதனைகளிலும் நோயிலும் காண முடிந்தது என்றும் திருத்தந்தை கூறினார்.

உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் முதன்முறையாக இடம்பெற்ற இந்த முத்திப்பேறு பட்டமளிப்புத் திருப்பலியில், புவனோஸ் ஐரெஸ் (Buenos Aires) மற்றும் தென் அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.

இத்திருப்பலியை நிகழ்த்திய, புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கானத் திருப்பீடப் பேராயத் தலைவர் பேராயர் ஆஞ்சலோ அமாத்தோ, இப்புனிதை இயேசுவின் திருமுகத்தைக் காட்சியில் கண்டது பற்றி விளக்கினார்.








All the contents on this site are copyrighted ©.