2010-05-31 14:35:35

திருத்தந்தை - நாம் சிலுவை அடையாளம் வரையும் பொழுது, அது நம்மில் வாழும் மூவொரு கடவுளை நினைவுபடுத்துகின்றது


மே31,2010 நாம் சிலுவை அடையாளம் வரையும் பொழுது, நம்மில் வதியும் மூவொரு கடவுளையும், இறைவனின் பெயரையும் நாம் திருமுழுக்கு பெற்ற நேரம் முதற்கொண்டு விசுவாசத்திற்கு நம்மை அர்ப்பணித்திருப்பதையும் நினைவுபடுத்துகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

மூவொரு கடவுள் விழாவான இஞ்ஞாயிறன்று பகல் 12 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானத் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இஞ்ஞாயிறு, பாஸ்கா மறைபொருள்களிலுள்ள தந்தை, மகன், தூய ஆவி குறித்த கடவுளின் வெளிப்பாட்டை நினைவுபடுத்துகின்றது என்றுரைத்தார்.

ஒரே கடவுள், மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்பதை மனித எண்ணத்தாலும் மொழியாலும் போதுமான அளவு விளக்க முடியாமல் இருந்த போதிலும், திருச்சபைத் தந்தையர், தங்களது வாழ்வு மற்றும் ஆழமான விசுவாசத்தின் வழியாக விளக்க முயற்சித்திருக்கிறார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.

உண்மையில், மூவொரு கடவுள், நாம் திருமுழுக்கு பெற்ற நேரம் முதல் நம்மில் வாழத் தொடங்குகிறார் என்று சொல்லி, தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் நான் உனக்குத் திருமுழுக்கு அளிக்கிறேன் என்று திருமுழுக்கு திருவருட்சாதன நேரத்தில் அருட்பணியாளர் கூறுவதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

திருச்சிலுவை அடையாளத்தை வரையும் ஒவ்வொரு நேரமும் நாம் திருமுழுக்குப் பெற்ற இறைவனின் பெயரை நினைவுகூருகிறோம் என்றும் கூறிய அவர், சிலுவை அடையாளத்திலும், வாழும் இறைவனின் பெயரிலும், விசுவாசத்தை உயிரூட்டம் பெறச் செய்யும் மற்றும் செபிக்கத் தூண்டும் கூறுகள் உள்ளன என்று கூறினார்.

இஞ்ஞாயிறோடு திருவழிபாட்டு ஆண்டின் பொதுக் காலம் தொடங்கியுள்ளது, இது, நமது கிறிஸ்தவ அர்ப்பணத்தைக் குறைத்துவிடக் கூடாது, மாறாக, திருவருட்சாதனங்கள் வழியாக இறைவாழ்வுக்குள் நுழைவதற்கு நம்மை நடத்திச் செல்கின்றது என்றார் அவர்.

கடவுளின் திருவருளுக்குத் திறந்த மனதுடையவர்களாய் இருக்கவும், இறைவன் மற்றும் பிறரன்பில் வளரவும் ஒவ்வொரு நாளும் அழைக்கப்படுகிறோம் என்பதையும் நினைவுபடுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.