2010-05-29 14:45:26

திருத்தந்தை - அ.தந்தை மத்தேயு ரிச்சி சே.ச. சீனாவுக்கும் மேற்குக்கும் இடையே முக்கியமான உரையாடலை உருவாக்கினார்


மே29,2010 நற்செய்தியை அறிவிப்பதற்காகச் சீனாவுக்கு சென்ற சேசு சபை அருள்தந்தை மத்தேயு ரிச்சி (Matteo Ricci) முதன்முதலில் ஒரு மறைபோதகர் என்றுரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

சீனாவில் அவர் நற்செய்தி அறிவிக்கும் போது கலாச்சாரங்களுக்கு இடையேயும் சீனாவுக்கும் மேற்குக்கும் இடையேயும் முக்கியமான உரையாடலை உருவாக்கினார் என்றும் திருத்தந்தை கூறினார்.

அருள்தந்தை மத்தேயு ரிச்சி இறந்ததன் 400ம் ஆண்டை முன்னிட்டு, அவர் பிறந்த இத்தாலியின் Macerata மற்றும் மார்க்கே பகுதியின் சுமார் ஏழாயிரம் பயணிகளை வத்திக்கான் ஆறாம் பவுல் மண்டபத்தில் இச்சனிக்கிழமை சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

Macerata மறைமாவட்ட ஆயர் Claudio Giuliodori தலைமையில் திருத்தந்தையைச் சந்தித்த Macerata-Tolentino-Recanati-Cingoli-Treia பகுதியின் விசுவாசிகள், குருக்கள், குருமாணவர்கள், மாணவர்கள், அரசு அதிகாரிகள், இராணுவத்தினர், இயேசு சபை அதிபர் அருள்தந்தை Adolfo Nicolás, இயசு சபை பிரதிநிதிகள் என சுமார் ஏழாயிரம் பேரைச் சந்தித்தார் திருத்தந்தை.

"Nimen hao" அதாவது எப்படி இருக்கிறீர்கள்? என்று சீன மொழியில் இப்பயணிகளை முதலில் வாழ்த்தி வரவேற்ற திருத்தந்தை, ரிச்சி, சீனாவில் இன்றும் உயர்ந்த மதிப்புடன் விளங்குகிறார் என்றும் கூறினார்.

இந்த மறைபோதகக் குருவின் பணியானது, நற்செய்தியைச் சீனக்கலாச்சாரத்தோடு ஒன்றிணைத்தது மற்றும் மேற்கத்திய கலாச்சாரத்தையும் அறிவியலையும் சீனாவில் நுழைத்ததோடு பிரிக்க முடியாதபடி இருந்தது என்றும் தெரிவித்தார் அவர்.

மத்தேயு ரிச்சி மற்றும் அவரது நண்பர்களின் நினைவானது சீனத் திருச்சபைக்காகவும் சீன மக்களுக்காகவும் நாம் தொடர்ந்து செபிக்க அழைப்பு விடுக்கின்றது என்ற திருத்தந்தை, ஒவ்வோர் ஆண்டும் மே24ம் தேதி சகாய அன்னை திருவிழாவன்று சீனாவுக்காகச் செபிக்கின்றோம் என்று கூறினார்.

இந்த மாபெரும் இயேசு சபை மறைபோதகர் மத்தேயு ரிச்சி, 1610ம் ஆண்டு மே11 ம்தேதி பெய்ஜிங்கில் இறந்தார். சீனாவில் வெளிநாட்டவர் அடக்கம் செய்யப்படுவது நினைத்துப் பார்க்க முடியாதது, எனினும் இவர் அங்கு அடக்கம் செய்யப்பட அரசு அனுமதியளித்தது அவருக்குக் கிடைத்த அசாதாரணச் சலுகையாகும், இன்றும் அரசு அதிகாரிகளால் அவரது கல்லறை பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்ப்டடு வருகிறது என்றும் திருத்தந்தை உரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.