2010-05-28 15:19:11

மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு மேற்கு வங்காளத் திருச்சபைத் தலைவர்கள் கண்டனம்


மே28,2010 மேற்கு வங்காளத்தில் 65 பேர் இறப்பதற்கும் சுமார் 200பேர் காயமடைவதற்கும் காரணமான தொடருந்து வன்முறைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் தலத்திருச்சபைத் தலைவர்கள்.

வன்முறை எந்த வடிவில் இடம் பெற்றாலும் திருச்சபை அதனைக் கண்டிக்கிறது என்றுரைத்த மேற்கு வங்காள ஆயர் பேரவைச் செயலர் ஆயர் தாமஸ் டி சூசா, இதில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுடன் திருச்சபை தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கிறது என்றும் கூறினார்.

மேலும், இந்தத் தாக்குதல், மனிதக் குரூரத்தின் அடையாளமாக இருக்கின்றது என்று சொல்லி இதற்குத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் இந்திய துறவு சபைகள் அவைச் செயலர் அருட்சகோதரர் Mani Mekkunnel.

மும்பையிலிருந்து கொல்கட்டா சென்று கொண்டிருந்த Gyaneshwari வேகத் தொடருந்து, மேற்கு வங்காளத்தின் மேற்கு Midnapore மாவட்டத்தில் அதன் 13 பெட்டிகள் இவ்வெள்ளி அதிகாலை 1.30 மணிக்கு தடம் புரண்டதில் 65 பேர் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு மாவோயிஸ்ட்கள் காரணம் என்று அரசும் பொது மக்களும் நம்புவதாக ஊடகங்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, கிராமங்களுக்கு எதிராக இடம் பெறும் கொடுமைகள், மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கண்டித்து கறுப்பு வாரம் ஒன்றைத் தொடங்குவதாக மாவோயிஸ்ட்டுகள் அறிவித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரையிலான மாவோயிஸ்ட்டுகள் இந்தியாவின் 28 மாநிலங்களில் குறைந்தது இருபதில் செயல்பட்டு வருகின்றனர். 2009ல் அரசு அவர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டபின்னர், கடந்த ஆண்டில் இவர்களால் ஏறக்குறைய 600 பேர் இறந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.