2010-05-28 15:18:03

சமுதாயத்தின் வருங்காலம் மக்களுக்கிடையேயான உறவுகள், நியாயமான வேறுபாடுகளின் தனித்துவங்களை மதித்தல் போன்றவற்றைப் பொறுத்தே அமைந்திருக்கிறது - திருத்தந்தை


மே28,2010 குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்வோர்க்கானத் திருப்பீட அவை நடத்திய மூன்று நாள் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், குடியேற்றதாரரின் உரிமைகளையும் கடமைகளையும் ஏற்பதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைப் பாராட்டினார்.

பொதுநலனையும் தனியாட்களை மதிப்பதையும் ஊக்குவிக்கும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சட்டங்கள், அமைதி, சகோதரத்துவம், எல்லாரின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உலகைக் கட்டி எழுப்புவதற்கு உதவுவதாய் அமைய வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.

உண்மையில், அமைதியான நல்லிணக்கத்துக்கான கூறுகள், விவேகமும் தெளிவான வழிமுறைகள் வழியாகப் பெறப்படலாம் என்றுரைத்தத் திருத்தந்தை, இவை குடும்பங்கள் ஒன்றிணைப்பு, அகதிகள், அடைக்கலம் தேடுவோரை ஏற்றல், மனித வியாபாரத்தைத் தடை செய்தல் போன்றவற்றுக்கு உதவுவதாய் இருக்க வேண்டுமென்றும் கூறினார்.

மக்களுக்கிடையேயான உறவுகள், கலாச்சாரங்களுக்கிடையேயான உரையாடல், நியாயமான வேறுபாடுகளின் தனித்துவங்களை மதித்தல் ஆகியவற்றைப் பொறுத்தே சமுதாயத்தின் வருங்காலம் அமைந்திருக்கிறது என்ற திருத்தந்தை, திருச்சபை ஒவ்வொரு குடியேற்றதாரருக்கு மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பங்களின் ஒன்றிணைப்புக்காவும் உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

குடியேற்றதாரரின் தந்தை என அழைக்கப்படும் முத்திப் பேறுபெற்ற Giovanni Battista Scalabrini இறந்ததன் 105ம் ஆண்டு வருகிற ஜூன் ஒன்றாந்தேதி சிறப்பிக்கப்படுகிறது, குடியேற்றதாரர் குறித்த உங்களின் பணிக்கு இப்புனிதர் தூண்டுதலாக இருப்பாராக என்று அப்பிரதிநிதிகளிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.