2010-05-28 15:21:28

இத்தாலியின் பிறப்பு விகிதம், வேலைவாய்ப்பின்மை குறித்து ஆயர்கள் கவலை


மே28,2010 இத்தாலியில் காணப்படும் மிகக் குறைவான பிறப்பு விகிதம் மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து அந்நாட்டு ஆயர்கள் தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளனர்.

ஐந்து நாட்களாக நடத்திய தங்களது 61வது பொதுக் கூட்டத்தை இவ்வெள்ளியன்று நிறைவு செய்த இத்தாலிய ஆயர்கள், பிறப்பு நோய்த் தற்கொலை நோக்கி இத்தாலி மெது மெதுவாகச் சென்று கொண்டிருக்கிறது என்று எச்சரித்தனர்.

இன்று 50 விழுக்காட்டுக்கு மேற்பட்ட இத்தாலியக் குடும்பங்களுக்கு குழந்தைகள் இல்லை, மேலும், ஏறத்தாழ பாதிக் குடும்பங்கள் ஒரு குழந்தையைக் கொண்டிருக்கின்றன, மற்ற குடும்பங்களில் இரண்டு குழந்தைகள் உள்ளன. 5.1 விழுக்காட்டு குடும்பங்கள் மட்டுமே மூன்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளையும் கொண்டிருக்கின்றன என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

இக்கூட்டத்தில் உரையாற்றிய இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ(Angelo Bagnasco), சிறாரை மையமாகக் கொண்ட உடனடிக் கொள்கைகள் அவசியம் என்று கூறினார்.

வருங்காலச் சமுதாயத்தை விடுதலையாக்கும் புதுப்பித்தல் இடம் பெறுமாறு கேட்டுக் கொண்ட கர்தினால், ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்குமிடையேயான திருமணத்தின் முறிவுபடாதன்மையைக் கொண்ட குடும்பம் வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் உரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.