2010-05-26 15:14:05

மனித உரிமை நிபுணர் குழு: இலங்கை அரசு கோரிக்கையை பான் கி மூன் நிராகரித்தார்


மே26,2010 இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்கப் படையினரின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கும் நிபுணர் குழு அமைப்பது சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகும் என்று அந்நாட்டு அமைச்சர் பெய்ரீஸ் கூறியதை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் நிராகரித்துள்ளார்.

இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச 8 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார் என்றும், அதனை அமெரிக்கா வரவேற்றுள்ள நிலையில், மனித உரிமை மீறல்கள் குறித்து ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழுவை நியமிக்க ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் முடிவெடுத்திருப்பது தங்கள் நாட்டின் உள் நாட்டு விவகாரத்தில் தலையிடுவது ஆகும் என்று சிறிலங்க அயலுறவு அமைச்சர் பேரசாசிரியர் ஜி.எல். பெய்ரீஸ் கூறியிருந்தார்.

கடந்த திங்கட்கிழமை நியூயார்க்கில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனைச் சந்தித்தபோதும் அவரிடம் இக்கருத்தை நேரில் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த பான் கி மூன், “இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களைப் பொறுப்பாக்குவது குறித்து ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைக்கும் பணி தொடரும்” என்று கூறியுள்ளார்.

“மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து பொறுப்பாக்குவது என்பது சிறிலங்க அரசு எனக்கு அளித்த உறுதி மொழியாகும். அந்த உறுதிமொழியின் மீது சர்வதேச விதிமுறைகளின் படி எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து எனக்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்கும் பணியை நான் மேற்கொண்டு வருகிறேன்” என்றும் கூறியுள்ள பான் கி மூன், “சிறிலங்க அரசு விசாரணை ஆணையம் அமைக்கப்போவதாக அறிவித்துள்ளதை நீங்கள் அறிவீர்கள், அந்த ஆணையம் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் நிபுணர் குழு எனக்கு ஆலோசனை வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அயலுறவு அமைச்சர் பெய்ரீஸ் உடனான தனது சந்திப்பின் போது, போரினால் அங்கு இடம் பெயர்ந்த மக்களின் நிலையை மேம்படுத்தவும், அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தம் செய்வதை வேகப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டதாகவும் பான் கி மூன் கூறியுள்ளார்.

 








All the contents on this site are copyrighted ©.