2010-05-26 15:12:54

இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளை கணக்கெடுக்க மத்திய அரசு முடிவு


மே26,2010 இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, நான்கு கோடியைத் தாண்டியுள்ளவேளை, நாடு முழுவதும் நீரிழிவு நோயாளிகளை கணக்கெடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அறிவித்தார்.

நீரிழிவு நோயாளிகளின் உலகத் தலைநகராக இந்தியா விளங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளதையடுத்து நீரிழிவு நோயாளிகளின் உண்மையான எண்ணிக்கையை கணக்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், ஜெனிவாவில் நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் ஐந்து நாள் மாநாட்டில், நீரிழிவு நோயாளிகளைக் கணக்கெடுப்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது. 25 முதல் 70 வயது வரை உள்ளவர்களிடம், இந்தக் கட்டாய கணக்கெடுப்பு நடக்க உள்ளது என்றார்.

சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான துவக்க நிலையில் உள்ளவர்களின் உணவு மற்றும் பழக்கவழக்கங்களை மாற்றி, அவரை சர்க்கரை நோய் அண்டாதவாறு நடவடிக்கை எடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஒப்பிடுகையில் அறுபது சதவீத நீரிழிவு நோயாளிகள், ஆசியாவில் தான் உள்ளனர். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் பத்து இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் நீரிழிவு நோயால் இறக்கின்றனர். சராசரியாக நீரிழிவு நோயாளிகள் மூவாயிரம் ரூபாய் வரை செலவிடுகின்றனர் என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.








All the contents on this site are copyrighted ©.