2010-05-26 15:07:01

அகதிகள் மற்றும் குடியேற்றதாரர்களுக்கு ஆதரவாக நடவடிக்கைகளை எடுப்பதில் பல்வேறு அமைப்புக்களுக்கிடையே ஒத்துழைப்பு இன்றியமையாதது - JRS இயக்குனர்


மே26,2010 அகதிகள் மற்றும் கட்டாயமாக இடம் பெயர்வோர்க்கு ஆதரவாக நடவடிக்கைகள் எடுப்பதில், சர்வதேச நிறுவனங்கள், நாடுகள் மற்றும் திருச்சபைக்கு இருக்கின்ற பல்வேறு மற்றும் பொதுவான கடமைகள் குறித்து, JRS என்ற இயேசு சபை அகதிப்பணியின் சர்வதேச இயக்குனர் அருட்தந்தை Peter Balleis கோடிட்டுக் காட்டினார்.

குடியேற்றதாரர் மற்றும் அகதிகளுக்கு மேய்ப்புப்பணியாற்றும் திருப்பீட அவை உரோமையில் இப்புதனன்று தொடங்கியுள்ள 19வது நிறையமர்வு கூட்டத்தில் உரையாற்றிய அருட்தந்தை Balleis, சண்டைகள், வறுமை, சமத்துவமின்மை, அநீதி, மனித உரிமை மீறல்கள், மோசமான நிர்வாகம், பேரிடர்கள் போன்ற காரணங்களால் இக்காலத்தில் மக்கள் அதிகமாக புலம் பெயர்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டினார்.

அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு கல்வி தொடங்கி மனித உரிமைகளைக் காப்பது வரை ஒவ்வொரு கூறும் முக்கியமானது என JRS அமைப்பு கருதுகிறது என்று குறிப்பிட்டு, இந்த அமைப்பின் பல்வேறு நாடுகளிலுள்ள கிளைகள் ஏறக்குறைய 2,50,000 சிறாருக்குக் கல்வி அளித்து வருகிறது என்றும் அவர் அறிவித்தார்.

இந்தக் கிளை அமைப்புகள், புலம்பெயர்ந்த அனைத்துச் சிறாருக்கும் தரமான கல்வி கிடைப்பதற்கு உதவி செய்து வருகின்றது என்றும் உரைத்த இயேசு சபை அருட்தந்தை Balleis, உலகில் அனைத்துச் சிறாருக்கும் குறைந்தது ஆரம்பக் கல்வியாவாது கிடைப்பதற்கு அரசுகள் ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

குடியேற்றதாரர் மற்றும் அகதிகளுக்கான திருப்பீட அவை தொடங்கியுள்ள 19வது ஆண்டுக் கூட்டம் இவ்வெள்ளியன்று நிறைவடைகின்றது.








All the contents on this site are copyrighted ©.