2010-05-25 14:12:33

திருப்பாடல் 11


மே25,2010 RealAudioMP3 வேத புத்தகத்தில் தாவீது என்ற இஸ்ரயேலின் புகழ் பெற்ற அரசர் பற்றி வாசிக்கிறோம். தாவீது, பெத்லகேம் என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது தந்தையின் ஆட்டு மந்தையை மேய்த்துக் கொண்டிருந்தவர். அவர் தமது ஆடுகளைக் கொடிய விலங்குகளிடமிருந்து பத்திரமாகப் பாதுகாத்து வந்தவர். ஒருநாள் இவர் தனது சகோதரர்களுக்கு உணவு எடுத்துச் சென்றார். அச்சமயம் அவரின் சகோதரர்கள் சவுல் அரசனுக்காகப் பெலிஸ்தியர்களோடு போரிட்டுக் கொண்டிருந்தனர். பெலிஸ்தியர்களின் மாவீரன் கோலியாத் ஆறரை முழம் உயரமுடையவன். அவனது ஈட்டியின் முனை ஏழு கிலோ இரும்பாலானது. எனவே சவுலும் அவரது படைகளும் கோலியாத்துக்குப் பயந்தனர். இந்தச் சூழலில் சிறுவன் தாவீது களமிறங்கி மாவீரன் கோலியாத்தைக் கொன்றான். அதன்பின்னர் தாவீது சவுலுடன் அரண்மனையில் வாழ்ந்து வந்தான். சவுல் மனவருத்தமாக இருந்த போதெல்லாம் தாவீது யாழிசைத்து அவரை மகிழ்வித்தார். சவுல் மக்கள் போற்றும் சிறந்த அரசராக விளங்கினார். ஆனால் நாளடைவில் அவர் கடவுளுக்குக் கீழ்ப்படியாததால் கடவுளின் வெறுப்பை சம்பாதித்தார். அதனால் தாவீது அரசனாக வேண்டுமென்று கடவுள் விரும்பினார். இதனால் சவுல் தாவீதைக் கொல்ல வழி தேடினார். சவுலின் கொலைவெறியிலிருந்து தப்பித்துச் செல்லுமாறு தாவீதின் நண்பர்கள் அறிவுரை சொன்னார்கள். முதலில் தாவீது அதற்கு மறுத்தாலும் பின்னர் கடவுள் சொன்னதால் தாவீது தப்பித்துச் சென்றார். வயல்களிலும் மரங்கள் அடர்ந்த காடுகளிலும், குன்றுகளிலும் வாழ்ந்தார். அச்சமயங்களில் தாவீது தனது நிலையை எண்ணி இறைவனிடம் செபித்தார். எவ்வாறெனில் .............

நான் ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்: நீங்கள் என்னிடம், 'பறவையைப் போல மலைக்குப் பறந்தோடிப் போ. ஏனெனில், இதோ! பொல்லார் வில்லை வளைக்கின்றனர்: நாணில் அம்பு தொடுக்கின்றனர்: நேரிய உள்ளத்தார்மீது இருளில் அம்பு எய்யப் பார்க்கின்றனர். அடித்தளங்களே தகர்க்கப்படும் பொழுது, நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்?' என்று சொல்வது எப்படி? ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்: அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது: அவர் கண்கள் உற்று நோக்குகின்றன: அவர் விழிகள் மானிடரைச் சோதித்தறிகின்றன. ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்: வன்முறையில் நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார். அவர் பொல்லார் மீது கரிநெருப்பும் கந்தகமும் சொரியும்படி செய்கின்றார்: பொசுக்கும் தீக்காற்றே அவர்கள் குடிக்கும் பானமாகும். ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்: அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர்.

நாம் கேட்ட இந்தத் திருப்பாடல் 11, தாவீது தன்னைக் கொலை செய்வதற்கு முயற்சிக்கும் எதிரிகளிடமிருந்து தன்னையும் தனது ஆட்களையும் காக்குமாறு இறைவனிடம் செபித்த பாடலாகும். நீர் சவுலின் ஆட்களிடமிருந்து தப்பித்துச் போய்விடும் என்று அறிவுரை சொன்ன தனது நண்பர்களிடம் தாவீது, “நான் ஏன் ஓடிப் போக வேண்டும்” என்று கேட்கிறார். அதற்கு அவரது நண்பர்கள், பொல்லாதவர்களும், கடவுள் எண்ணமற்றவர்களும், நேர்மையான மனிதர்களைக் கொல்லப் பார்க்கின்றனர், எனவே நீர் 'பறவையைப் போல மலைக்குப் பறந்தோடிப்போம் என்றனர்.

பொதுவாக, பறவைகள் வேடர்களின் கண்ணிகளிலிருந்து தப்பிப்பதற்காக அவை உயர்ந்த மலைகளுக்குப் பறந்து சென்றுவிடும். அதுபோன்று நல்ல மனிதர்களும் தீயோரின் தீச்செயல்களிலிருந்து தப்பித்து மலைகளுக்குச் செல்ல வேண்டும், ஆண்டவரே மலையாயிருந்து இவர்களைக் காத்துக் கொள்வார். மலைகளில் இறைவன் தம்மை வெளிப்படுத்தியிருப்பதற்கு விவிலியத்தில் பல சான்றுகளை வாசிக்கிறோம். மோசே ஒரேபு மலையில் எரியும் முட்புதரில் இறைவனின் குரலைக் கேட்டார். அவர் சீனாய் மலையில் பத்துக் கட்டளைகளைப் பெற்றார். இயேசு தபோர் மலையில் தம்மை வெளிப்படுத்தினார். கல்வாரி மலையில் இறந்தார். மேலும், ஒவ்வொரு மலையும் ஒரு கடவுளைக் கொண்டிருந்ததாகப் பழங்காலத்தில் நம்பப்பட்டது. ஏன் இன்றும்கூட உயரமான மலைகளில் ஆலயங்கள் கட்டி வழிபடுகிறோம். எனவே தாவீதைப் பின்பற்றி, நாமும், சிக்கல்கள், கொலை மிரட்டல்கள், சோதனைகள், வேதனைகள் போன்றவற்றை எதிர்நோக்கும் போது இறைவனை நம்பி அவரிடம் அடைக்கலம் தேட வேண்டுமென்று இந்தத் திருப்பாடல் 11 நமக்கு உணர்த்துகிறது.

இந்தத் திருப்பாடலில், தாவீது அரசர், இறைவன் வன்முறையை விரும்புவோரை வெறுக்கின்றவர். பொல்லாதவர் மீது கரிநெருப்பும் கந்தகமும் சொரியும்படிச் செய்பவர் என்று செபிக்கிறார். பழைய ஏற்பாட்டில் பாவத்தில் வாழ்ந்த சோதோம் கொமோரா நகரங்களை ஆண்டவர் இம்மாதிரிதான் அழித்தார். அதனை தமது துயர நேரத்தில் நினைவுகூர்கிறார் தாவீது. அதேசமயம் இறைவன் நேரிய செயல்களை விரும்புகின்றவர். நீதியுள்ளவர். நேர்மையாளர்கள் அவரது முகத்தைக் காண்பார்கள் என்றும் சொல்கிறார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம், அதிகராம் 10, திருச்சொற்கள் 35,37 மற்றும் 38ல் இதைத்தான் ஆசிரியர் சொல்கிறார். நீங்கள் உங்களிடம் இருக்கும் துணிவை கைவிட்டுவிடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு. நேர்மையுடன் நடக்கும் என் அடியார் நம்பிக்கையினால் வாழ்வு அடைவார். ஆம். நல்ல மனிதருக்கு அழகு கடவுளின் வல்லமையிலும் நன்மைத்தனத்திலும் நம்பிக்கை வைப்பதாகும்.

அன்று இஸ்ரயேல் மக்கள் துன்பதுயர வேளைகளில் இறைவனைத்தான் நாடினார்கள். இந்த ஒரு பண்பைத்தான் திருப்பாக்களில் வாசிக்கிறோம். திருப்பாக்கள் 10,12,13 போன்றவைகளில் அம்மக்கள் இறைவனின் நீதிக்காகவும், அவரின் உதவி கேட்டும் உருக்கமாக மன்றாடுகின்றனர். எவ்வாறெனில் .............

ஆண்டவரே, ஏன் வெகு தொலைவில் நிற்கின்றீர், பொல்லார் தங்களது இறுமாப்பினால் எளியோரைக் கொடுமைப்படுத்துகின்றனர். ஆனால் நீர் எளியோரின் உள்ளத்திற்கு ஊக்கம் அளித்து அவர்களுக்குச் செவிசாய்க்கின்றீர். ஆண்டவரே, இறையன்பர்கள் அற்றுப் போய்விட்டனர். ஒருவர் அடுத்திருப்பவரிடம் பொய் பேசுகின்றனர். தேனொழுகும் இதழால் இருமனத்தோடு பேசுகின்றனர். ஆண்டவரே, நீர் எம்மைக் காப்பாற்றும். நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

அன்பு நேயர்களே, இஸ்ரயேல் மக்களின் இந்தச் செபங்களைக் கேட்கும் போது, நானும்கூட இம்மாதிரியான சூழல்களைச் சந்தித்திருக்கிறேன். நானும் இப்படித்தான் செபித்தேன் என்று உங்களில் பலர் நினைக்கலாம். போரில் அநியாயமாகத் தங்கள் சொந்தங்களை இழந்த போது, கடும் நோய்கள், மாரடைப்புகள், திடீர் விபத்துக்கள் போன்றவற்றில் பிள்ளைகளை, பெற்றோரை, கணவன் மனைவிகளை, நெருங்கிய சொந்தபந்தங்களை இழந்த போது, யாரோ செய்யும் தவறுகளுக்காக அநியாயமாகத் தண்டனைகளை அனுபவிக்கும் போது, இப்படியான மனதை வாட்டும் பல நேரங்களில் ஆண்டவரே எனக்கு உதவி செய்யும், எனக்கு உம்மையன்றி வேறு துணை இல்லையென்றுதான் செபிக்கின்றோம். கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மங்களூர் விமான விபத்து நம்மையெல்லாம் உலுக்கி எடுத்திருக்கிறது. 158 மனித உடல்கள் கருகிப் போய்விட்டன. துபாயிலிருந்து எத்தனையோ கனவுகளுடன் வந்து கொண்டிருந்த இவர்களது உறவுகள் இப்படித்தானே இன்று செபிக்க முடியும்? ஆண்டவரே, நாங்கள் என்ன பாவம் செய்தோம், எங்களின் அழுகுரல்களைக் கேட்டருளும் என்றுதானே செபிக்க முடியும்?

நமக்கு, எல்லாம் நன்றாக அமையும் போது செபிப்பது எளிதாக இருக்கும். ஆனால் துன்பச் சூழலில் சிக்கித் தவிக்கும் போது செபம் கசப்பான காடியாக இருக்கிறது. ஆனால் இவ்வேளைகளில்தான் செபம் மிகமிகத் தேவை. “துன்பமெனும் திட்டமனைத்தும் சூறையிட, ஐயாவே, இன்பவெள்ளம் வந்திங்கு எதிர்ப்படவும் காண்பேனே” என்று மன்றாடிய தாயுமானவர் போல, துன்ப நேரத்தில் நம்பிக்கையுடன் செபிக்க வேண்டும். நடப்பவைகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதற்குக் கடவுள் கண்பார்வையற்றவர் அல்ல. அவரது கண்கள் மனிதரை ஆய்வு செய்து வருகின்றன, அவர்களது நேர்மையை மதிப்பீடு செய்து வருகின்றன என்று எரேமியா 6, 27ல் வாசிக்கிறோம்.

ஒரு குரு தன் சீடர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்த போது ஒரு சீடன் எழுந்து நாம் விழிப்புணர்வு அடைவது எப்படி என்று கேட்டான். அது நம்மை இறைமையால் நிறைத்துக் கொள்ளும் போது நிகழ்கிறது என்றார் குரு. சீடர்கள் புரியாமல் முழித்ததும் சல்லடையில் தண்ணீரை நிரப்புவது போன்ற முயற்சி அது என்றார் குரு. சீடர்கள் எல்லாரும் சல்லடைகளைக் கையிலேந்தி தண்ணீரை நிரப்ப முயற்சி செய்தார்கள். அதில் தண்ணீர் ஊற்ற ஊற்ற அது கீழே வழிந்தோடியது. குருவிடம் சென்று இது முடியவே முடியாத காரியம் என்று கவலையுடன் சொன்னார்கள். குருவோ, ஏன் முடியாது என்று சொல்லி ஒரு சல்லடையை எடுத்து அருகில் இருந்த ஆற்றில் எறிந்தார். சல்லடை நீரில் மூழ்கியது. இப்போது பாருங்கள். சல்லடை நீரால் நிரம்பி விட்டது. எனவே நீங்களும் உங்களைத் தூக்கி இறைமைக்குள் எறியுங்கள். நீங்கள் நிறைந்து விடுவீர்கள். அப்படிச் செய்தால் இறைமை நமக்குள் துளிர்க்கும். கடவுள் மறுபடியும் நம்மில் உயிர்த்தெழ முடியும் என்றார் குரு. ஆம். இறைமையில் நம்மை மூழ்கடிக்கத் தேவை அவர் மீதான நம்பிக்கை.

இந்த நம்பிக்கையைத்தான் திருப்பாடல் 11 நம்மில் ஏற்படுத்துகின்றது. ஆதலால் அன்பர்களே, திருப்பாக்களை எல்லா நேரங்களிலும், குறிப்பாக துன்ப துயர நேரங்களில் எடுத்து வாசித்து செபிப்போம். அவற்றை எப்பொழுது எடுத்து வாசித்தாலும் அது, அன்றைய நமது நாளைப் பிரதிபலிப்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும். நமக்கு முன்னும் பின்னும், மேலும் கீழும் எப்பக்கமும் இருந்து, நாம் எங்கு சென்றாலும் நம்மை நிழல் போல் தொடர்கிறது இறைவனது பிரசன்னம். எனவே இந்த ஓர் ஆறுதலில் தினமும் வாழ்வைத் தொடருவோம்.

ஆண்டவரே, நேர்மையாளர்கள் உமது முகத்தைக் காண்பர்








All the contents on this site are copyrighted ©.