2010-05-24 15:43:47

திருத்தந்தை - கன்னிமரியா இன்றி பெந்தெகோஸ்து இல்லை


மே24,2010 புதிய பெந்தக்கோஸ்துக்களின் தொடர் சுழற்சியில் தூய ஆவியின் அருள்பொழிவால் திருச்சபை உறுதியுடன் வாழ்ந்து வருகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

தூய ஆவியார் பெருவிழாவாகிய இஞ்ஞாயிறன்று பகல் 12 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

திருச்சபை, தூய ஆவியின் அருள்பொழிவால் தொடர்ந்து வாழ்ந்து வருகிறது, காற்றில்லாமல் பயணிக்கும் கப்பல் போன்று இந்த அருள் இல்லையெனில் திருச்சபை தனது சொந்த சக்திகளை இழந்து விடும் என்றும் அவர் கூறினார்.

உள்ளூர் அல்லது சர்வதேச அளவில் இருந்தாலும் சரி, சிறிய கூட்டங்கள் அல்லது பெரிய கூட்டங்களானாலும் சரி, பெந்தக்கோஸ்து சில சக்திவாய்ந்த நேரங்களில், சிறப்பான வழியில் புதுப்பிக்கப்படுகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம், 1998ல் புதிய திருச்சபை இயக்கங்களுடன் பாப்பிறை இரண்டாம் ஜான் பால் நடத்திய சந்திப்பு போன்றவற்றை சில சக்திவாய்ந்த நேரங்கள் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, எனினும், உள்ளூர் சமூகங்களை எண்ணற்ற பெந்தக்கோஸ்துக்கள் உயிரூட்டம் பெறச் செய்கின்றன என்பதைத் திருச்சபை அறிந்தே இருக்கின்றது என்று கூறினார்.

பெந்தெகோஸ்து இன்றி திருச்சபை இல்லை, அதேவேளை கன்னிமரியா இன்றி பெந்தக்கோஸ்து இல்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன் என்ற திருத்தந்தை, உண்மையில் எருசலேம் மாடி அறையில் மரியாவும் திருத்தூதர்களும் கூடியிருந்த போது முதல் பெந்தக்கோஸ்து நடைபெற்றது என்றார்.

இது எப்பொழுதும், ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு காலத்திலும் நடைபெறுகின்றது, இயேசுவின் தாயான மரியா நம் மத்தியில் இருப்பதற்கு அண்மையில் பாத்திமாவில் சாட்சி பகர முடிந்தது, இதனை எல்லா மரியாத் திருத்தலங்களிலும் காண முடிகின்றது என்றும் உரைத்தார் திருத்தந்தை.

மரியாவோடு சேர்ந்து செபம் செய்வதற்கு கிறிஸ்தவர்கள் எங்கெல்லாம் கூடுகிறார்களோ அங்கெல்லாம் நம் ஆண்டவர் தூய ஆவியை அருளுகின்றார் என்றுரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.