2010-05-22 14:48:54

பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் 60 ஆயிரம் இலங்கை தமிழ்ச் சிறுவர்கள்


மே22,2010 :​ பள்ளிக்குச் செல்ல முடியாமல் இலங்கையில் அறுபதாயிரம் தமிழ் மாணவ,​​ மாணவிகள் தவித்து வருகின்றனர் என்று அந்நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும்,​​ முக்கிய எதிர்க்கட்சி தலைவருமான டி.எம்.​ சுவாமிநாதன் கூறினார்.

விடுதலைப்புலிகளுடனான போரில் இலங்கை அரசு வெற்றி பெற்று ஓராண்டு கடந்துவிட்டது.​ ஆனால் வன்னி உள்ளிட்ட வடக்கு இலங்கைப் பகுதியில் பள்ளிகள் சரிவர நடைபெறுவதில்லை என்று சுவாமிநாதன் மேலும் கூறினார்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் மொத்தம் 300 பள்ளிகள் உள்ளன.​ இவற்றில் 194 பள்ளிகள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன.​ இங்கு 86 ஆயிரம் சிறுவர்கள் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தனர்.​ ஆனால் தற்போது வெறும் 26 ஆயிரம் சிறுவர்கள் மட்டுமே பள்ளி செல்ல முடிகிறது என்றார் அவர்.

அங்குள்ள பள்ளிகள் திறக்கப்படாததால் எஞ்சியுள்ள சுமார் 60 ஆயிரம் சிறுவர்கள்,​​ பள்ளிக்குச் செல்ல முடிவதில்லை.​​ இலங்கை அரசு இப்போதாவது நடவடிக்கை எடுத்து பள்ளிகளைத் திறக்கவேண்டும் என்று சுவாமிநாதன் கேட்டுக் கொண்டார்.

இந்தப் பகுதிகள் போருக்கு முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.​ இந்த நிலையில் போரில் வெற்றி பெற்றதையடுத்து இப்பகுதி முழுவதும் இலங்கை இராணுவத்தின் வசம் வந்துவிட்டது.

மேலும் போரின்போது வன்னிப்பகுதியில் 60,900 வீடுகள் நாசமாக்கப்பட்டன.​ இதனால் அப்பகுதி மக்கள் வீடிழந்து தவித்து வருகின்றனர்.​ வீடிழந்துள்ள தமிழர்களுக்கு,​​ தமிழ் வம்சாவளியினர் வீடுகளைக் கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளனர்.​ இந்த வாய்ப்பை இலங்கை அரசு பயன்படுத்திக் கொண்டு யாழ்ப்பாண மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தர ஏற்பாடு செய்யவேண்டும் என்று சுவாமிநாதன் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.