2010-05-22 14:39:21

ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள், நற்செய்திக்கும் ஐரோப்பிய கலாச்சாரத்திற்குமிடையே நிலவும் ஆழமான பிணைப்பைக் காத்து உறுதிப்படுத்த வேண்டும் - திருத்தந்தை


மே22,2010 ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள், அவர்கள் கத்தோலிக்கரோ அல்லது ஆர்த்தாடாக்ஸ் கிறிஸ்தவரோ யாராயிருந்தாலும், அவர்கள் நற்செய்திக்கும் ஐரோப்பிய கலாச்சாரத் தனித்தன்மைக்குமிடையே நிலவும் ஆழமான பிணைப்பைக் காத்து உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

புனிதர்கள் சிரில், மெத்தோடியஸ் விழாவை முன்னிட்டு உரோமைக்கு வந்துள்ள பல்கேரிய மற்றும் மாசிடோனியக் குடியரசுகளின் பிரதிநிதிக் குழுக்களை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

பல்கேரிய பிரதமர் Boïko Borissov தலைமையிலானக் குழுவிடம் பேசிய போது, சலோனிக்காவைச் சேர்ந்த இந்த இரண்டு சகோதரப் புனிதர்களான சிரில், மெத்தோடியஸ், பல்கேரிய மக்களின் மனித மற்றும் ஆன்மீகக் கூறுகளை வடிவமைப்பதற்கு மிகவும் உதவியுள்ளனர் என்றார் திருத்தந்தை.

பல்கேரிய நாடு, பிற ஐரோப்பிய நாடுகளுடன் மேற்கொள்ளும் முழு ஐக்கியத்திற்கான பாதையில் இந்தப் புனிதர்களின் போதனைகளிலிருந்து பெற்ற கிறிஸ்தவ மூலங்களை வளர்த்து அவைகளுக்குச் சாட்சியாக வாழுமாறு வலியுறுத்தினார் அவர்.

இந்தக் கிறிஸ்தவப் பாரம்பரியத்தைக் காப்பதில் கத்தோலிக்கரும் ஆர்த்தாடாக்ஸ் கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நீதி மற்றும் அமைதியின் அடிப்படையில் சமுதாயத்தைக் கட்டி எழுப்ப உறுதியுடன் இருக்கும் பல்கேரிய சமுதாயத்தைத் தான் உற்சாகப்படுத்துவதாகவும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.