2010-05-21 15:13:28

திருத்தந்தை - திருச்சபையின் விலைமதிப்பிட முடியாத நற்செய்தி அறிவிப்புப் பணி, மனித சமுதாயத்திற்குச் செய்யப்படும் மிகநேர்த்தியான பணி


மே21,2010 பாப்பிறை மறைப்பணிகளின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏறக்குறைய 160 பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, திருச்சபையின் விலைமதிப்பிட முடியாத நற்செய்தி அறிவிப்புப் பணியானது, மனித சமுதாயத்திற்குச் செய்யப்படும் மிகநேர்த்தியான பணி என்று கூறினார்.

நற்செய்தியை அறிவிப்பது, கடவுளின் பிள்ளைகள் நீதியும் சகோதரத்துவமும் நிறைந்த சமுதாயத்தைக் கட்டி எழுப்பவும் அவர்களின் விடுதலைக்கும் அழைப்பு விடுப்பதாக இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

திருப்பீட நற்செய்திபரப்புப் பேராயம், 1622ம் ஆண்டு உருவாக்கப்பட்டது முதல் உலகெங்கும் மறைப்பணிகளுக்குச் செய்துவரும் ஒத்துழைப்புக்கும் உதவிகளுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார் திருத்தந்தை.

உலகைக் கிறிஸ்துவிடம் கொண்டு வருவதற்கான பணி நாமாகச் செய்வது அல்ல, மாறாக அது நம்மிடம் கொடுக்கப்பட்டது என்றும் உரைத்த திருத்தந்தை, உலக அருட்பணியாளர்கள் ஆண்டு சிறப்பிக்கப்பட்டுவரும் இக்காலத்தில் வாழும்முறையானது புதிய வடிவம் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.