2010-05-21 15:20:05

தாய்லாந்தில் குணமளிக்கும் பணி ஆரம்பிக்கப்பட வேண்டும் - திருச்சபைத் தலைவர்கள்


மே21,2010 தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் பிற நகரங்களிலும் அமைதி திரும்பியுள்ள இவ்வேளையில், அந்நாடு குணமளிக்கும் பணியைத் தற்போது ஆரம்பிக்க வேண்டும் என்று தாய்லாந்து திருச்சபைத் தலைவர்கள் கூறுகின்றனர்.

தாய்லாந்தில் இம்மாதம் 14ம் தேதியிலிருந்து இடம் பெற்ற அரசியல் வன்முறையில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த வன்முறையில் யார் வெற்றி, யார் தோல்வி என்பது இல்லை என்றுரைத்த Ubon Ratchathani ஆயர் Banchong Chaiyara, கோபம் வேதனைகள் இவைகள் இருந்த போதிலும் குணமளிக்கும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கூறினார்.

கத்தோலிக்கர் நாட்டின் அமைதிக்காகச் செபிக்க அழைப்பு விடுத்த அதேவேளை, அனைத்துத் தரப்பினரும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் மனக்காயங்கள் குணமடைவதற்கும் உழைக்குமாறு வலியுறுத்தினார் ஆயர் Chaiyara.

தாய்லாந்து நாட்டில் பிரதமர் அபிசித் பதவி விலக வேண்டும் மற்றும் அவர் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவத்ராவின் ஆதரவாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இப்புதனன்று போராட்டக்குழுத் தலைவர்கள் நான்கு பேர் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களை இராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால் கோபமடைந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். பாங்காக்கில் ஒரு புத்தர் கோவிலில் பதுங்கியிருந்து சண்டையிட்ட போராட்டக்காரர்களில் 9 பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.








All the contents on this site are copyrighted ©.