2010-05-19 15:51:24

மனித சமுதாயம் இக்காலத்தில் செய்யும் வளர்ச்சித் திட்டங்கள் வருங்காலத்தைக் கண்முன் கொண்டதாய் அமைய வேண்டும் - பேராயர் சிமோவோஸ்க்கி


மே19,2010 மனிதனை மையம் கொண்ட வளர்ச்சி, பொதுவான வளங்களை வளர்த்து அவைகளைப் பகிர்தல், வாழும் நிலையை மாற்றுதல் போன்றவற்றில் மனித சமுதாயம் இக்காலத்தில் செய்யும் செயல்கள் வருங்காலத்தைக் கண்முன் கொண்டதாய் அமையுமாறு திருப்பீட நலவாழ்வுத்துறைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski கேட்டுக் கொண்டார்.

சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் இத்திங்களன்று தொடங்கியுள்ள 63வது உலக நலவாழ்வுக் கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் Zimowski, ஐ.நா.வின் புதிய மில்லெனேய திட்டங்களில் கருக்கலைப்பு மற்றும் கருத்தடை சாதனங்களை ஊக்குவித்தல் இடம்பெறக் கூடாது என்று வலியுறுத்தினார்.

வருவாய் அதிகமான மற்றும் வருவாய் குறைந்த நாடுகளில் சுகாதார வசதிகள் அதிக அளவில் வித்தியாசப்படுகின்றன என்றும் 2008ம் ஆண்டில் வருவாய் குறைந்த நாடுகளில் வாழ்ந்த 95 இலட்சம் எய்ட்ஸ் நோயாளிகளில் 50 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு அந்நோய்க்கானச் சிகிச்சை கிடைக்கவில்லை என்றும் பேராயர் தனது உரையில் கூறினார்.

மலேரியா, காசநோய் போன்ற பெரிய வியாதிகளுக்கான சிகிச்சை வசதியும் இன்னும் போதுமானதாக இல்லை என்றுரைத்த அவர், புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களால் 100 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

வளர்ந்த நாடுகள் தங்களது தொழிநுட்பங்கள் மற்றும்சில பொருளாதார வளங்களை, வளர்ச்சி குன்றிய நாடுகளோடு பகிர்ந்து கொள்ளுமாறும் 5 நாள் கொண்ட இந்த ஐ.நா. கூட்டத்தில் பேராயர் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.