2010-05-19 16:16:37

நாளும் ஒரு நல்லெண்ணம் – மே 20


எண்ணங்களைப் புனிதப்படுத்துவோம்.

எண்ணங்கள் இல்லாமல் மனிதனால் வாழமுடியாது.

என்று சிந்திப்பதை நிறுத்துகிறானோ, அன்றே அவன் தேங்கிவிட்டான் என்று அர்த்தம்.

எண்ணங்கள் உதிக்காத மனமுடைய உடலில் செயல்பாடுகளுக்கு வழியில்லை, உணர்வுகளுக்குத் தேவையில்லை.

நாம் என்ன நினைக்கிறோம், நாம் என்ன செய்கிறோம், நாம் என்ன உணர்கிறோம் என்கின்ற விழிப்புணர்வு இல்லாத நிலையில் நம் உடல் அசைவிருந்தும் உயிரற்றதாய் மாறிவிடுகிறது.

இதே போல், எண்ணங்களை அடக்கத் தெரியாதவர்களும் பெரும்புயலின் சருகாய் மாறி விடுகின்றனர்.

எண்ணக்குதிரை என்பது அடக்கி ஒடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் திமிறிக்கொண்டுதான் இருக்கும்.

ஒவ்வொரு முறையும் நாம் நமக்குள்ளேயே முரண்பட்டு, பிரிந்து பிரிந்து பிளவுபட்டு நிற்கும் சூழல்கள் உருவாகும்.

எண்ணங்கள் ஒரு புறமும், செயல்கள் மறுபுறமும், உணர்வுகள் வழியறியாமலும் ஓடிக்கொண்டிருக்கும்போது வலி மட்டுமே அங்கு மிஞ்சுகிறது.

நாம் நமக்குள்ளேயே ஒருங்கிணைப்பு இல்லாமல் ஒற்றுமை கொள்ள முடியாமல், ஒத்திசைவுக்காய் ஏங்கும் நிலை பிறக்கிறது.

இந்த மனச்சுமை களையப்பட வேண்டுமெனில் நம் சிந்தனைகளை முதலில் கூராக்குவோம். அவைகளை புனிதப்படுத்துவோம்.

அச்சிந்தனைகளிலிருந்து முரண்படாத செயற்பாடுகளை உருவாக்குவோம்.

அப்போதுதான் நம் உணர்வுகள் வலியின்றி இதமாய் நகரும்.








All the contents on this site are copyrighted ©.