2010-05-18 15:54:39

மே, 19 – நாளுமொரு நல்லெண்ணம்


 Bankei என்ற சென் குரு நடத்திய தியானங்களில் கலந்து கொள்ள நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சீடர்கள் அவரைத் தேடி வந்து அவரது மடத்தில் தங்கினர். அச்சீடர்களில் ஒருவர் திருடும்போது கையும் மெய்யுமாகப் பிடிபட்டார்.

அவரைப் பற்றி குருவிடம் புகார் சொல்லப்பட்டது. குரு அதைக் கண்டுகொள்ளவில்லை.

மீண்டும் ஒரு முறை அந்த சீடர் திருடும்போது அகப்பட்டார். மீண்டும் குருவிடம் தெரிவித்தனர். குரு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது, அனைத்து சீடர்களும் சேர்ந்து குருவுக்கு ஒரு விண்ணப்பம் சமர்ப்பித்தனர். திருடிய அந்த சீடரை மடத்தை விட்டு வெளியேற்றவில்லை எனில் தாங்கள் அனைவரும் அந்த மடத்தை விட்டு மொத்தமாக புறப்பட வேண்டியிருக்கும் என்று அந்த விண்ணப்பத்தில் கூறியிருந்தனர்.

குரு அவர்கள் அனைவரையும் அழைத்து, "நீங்கள் அனைவரும் நல்லவர்கள், புத்திசாலிகள். உங்களுக்கு நல்லது எது, தீயது எது என்று நன்கு தெரியும். எனவே நீங்கள் எங்கு சென்றாலும் உங்களால் நல்லவைகளைக் கற்றுக் கொள்ள முடியும். எனவே நீங்கள் போவதாய் இருந்தால், போகலாம். ஆனால், இந்த சீடருக்கு நல்லது எது, தீயது எது என்று நான் சொல்லித் தராவிடில் வேறு யார் சொல்லித்தரப் போகிறார்கள்? எனவே, நான் இந்த சீடரை இங்கிருந்து அனுப்ப மாட்டேன்." என்று சொன்னார்.

இதைக் கேட்ட அந்த சீடரின் கண்ணீர் அந்த குருவின் பாதங்களைக் கழுவியது. அவரது மனதில் திருடவேண்டுமென இருந்த அனைத்து ஆசைகளும் கழுவப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.