2010-05-17 15:36:47

திருத்தந்தை - பாவம் நமது பகைவன், அதற்குப் பயப்பட வேண்டும்


மே17,2010 பாவம் நமது பகைவன், அதற்குப் பயப்பட வேண்டும் மற்றும் அதனை எதிர்த்துப் போராட வேண்டும் என்று பாப்பிறைக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய இரண்டு இலட்சம் மக்களிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

குருக்களின் தவறான பாலியல் நடவடிக்கைகள் குறித்து அண்மை காலமாகத் திருத்தந்தையும் திருச்சபையும் குருக்களும் இக்கட்டான சூழலை எதிர்கொள்வதையொட்டி தங்களது ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்துவதற்காகக் கூடியிருந்த மக்களிடம் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

துரதிஷ்டவசமாகத் திருச்சபையின் உறுப்பினர்களைத் தாக்கியுள்ள பாவமானது நமது உண்மையான பகைவன், அதற்குப் பயப்பட வேண்டும் மற்றும் இந்த ஆன்மீகத் தீமைக்கு எதிராகப் போராட வேண்டும் என்று ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார் திருத்தந்தை.

"திருத்தந்தையே, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" என்று எழுதப்பட்டிருந்த விளம்பரத் துணிகளைப் பிடித்துக் கொண்டிருந்த கூட்டத்தினரிடம், அன்பு நண்பர்களே, பாத்திமாவி்ல் பெருமளவான கூட்டத்தைப் பார்த்தது போல், இந்த வத்திக்கான் வளாகத்திலும் காண்பது அழகாக இருக்கின்றது என்று கூறினார்.

இத்தாலியின் பல்வேறு நகரங்களிலிருந்து வந்துள்ள நீங்கள், திருத்தந்தை, குருக்கள் மற்றும் திருச்சபையுடனான உங்களின் நெருங்கிய பிணைப்பபையும் பாசத்தையும் காட்டுகின்றீர்கள் என்ற அவர், உங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் அதிகாரிகளும் இருக்கின்றனர், அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.

இக்காலத்தில் பாவத்திற்கு அஞ்ச வேண்டும், அதேவேளை கடவுளிலும், நன்மைத்தனத்திலும் அன்பிலும் சேவையிலும் ஆழமாக வேரூன்ற வேண்டும் எனவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.